Tamilnadu

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் படி இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

டிச.16 ஆம் தேதி தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதேபோல், டிச. 17, 18, 19,20,21 ஆகிய ஐந்து தேதிகளிலும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் ஆகிய பதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நாளையும், நாளை மறுநாளும் ஆரஞ் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 115.6 முதல் 204.4 மிமீ வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ரூ.6000 யார் யாருக்கு கிடைக்கும்?.. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது என்ன?