Tamilnadu
மிக்ஜாம் புயல் : "பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, தமிழ்நாடு அரசை பாராட்டுகிறேன்" - ஒன்றிய குழு தலைவர்!
தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
மிக்ஜாம் புயலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டு, மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக 20 அமைச்சர் பெருமக்களும், 50-க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய காவல் பணி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, மாபெரும் பணியில் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டனர்.மழையினால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.இப்படி தமிழ்நாடு அரசு பல்வேறு மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொண்டதால் மக்கள் பெரிய ஆபத்துகளில் இருத்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஆய்வுக்காக ஒன்றிய ஆய்வு குழுவினர் தமிழ்நாடு வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரண்டாவது நாளாக ஒன்றிய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்...
அதில் குணால் சத்யார்த்தி (தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) ஆலோசகர்),திமான் சிங், (ஊரக வளர்ச்சி அமைச்சகம்), ரங்நாத் ஆடம் ஆகியோர் கொண்ட குழு காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே உள்ள அமரம்பேடு கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களை பார்வையிட்டு, பின்னர் செம்பரம்பாக்கம் ஏரியின் நீரளவு மற்றும் புயல் சமயத்தில் நீர் திறந்து விடப்பட்ட புகைப்பட கண்காட்சி ஆகியவை பார்வையிட்டனர்.
அதை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய குணால் சத்யார்த்தி, "இரண்டு நாட்கள் முழுவதுமாக சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பை ஆராய்ந்தோம். புயல் மழை வெள்ளத்தால் மக்கள் சில சிரமங்களை சந்தித்துள்ளனர். சென்னை மாநகர் மற்றும் புறநகர் என ஒட்டுமொத்த சென்னைக்கும் மழைநீர் வடிகாலுக்கான சிறப்பு திட்டம் தேவைப்படுகிறது. கன மழை வரும் பொழுது இங்குள்ள மக்கள் பாதிக்காமல் அரசு விரிவான நீண்ட கால திட்டமிடல் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு சரியான நேரத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது இல்லையென்றால் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும். உரிய நேரத்தில் நீர் திறந்து விடப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது அதற்காக இந்த அரசை நான் பாராட்டுகிறேன். தமிழ்நாடு முதல்வர் 5060 கோடி ரூபாய் கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார், அரசிடமிருந்து எங்களுக்கு இது குறித்து நாளை முதலமைச்சரை சந்திக்கும் பொழுது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை கொடுக்கப்படும் அதன் அடிப்படையிலும், நாங்கள் எங்கள் ஆய்வின் போது செய்த ஆய்வின் அடிப்படையிலும் அறிக்கை தயார் செய்ய உள்ளோம்" என்று கூறினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!