Tamilnadu

சூடு பிடிக்கும் ஆருத்ரா விவகாரம் : கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம் !

ஆருத்ரா கோல்ட் நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக்கூறி சுமார் ஒரு லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடிவரை மோசடி செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக ஐயப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ் உட்பட 11-க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, இந்த மோசடி விவகாரத்தில் திரைப்பட நடிகரும் பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணை தலைவருமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது அம்பலமானது. இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்தார். மேலும் ஆருத்ரா மோசடிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், தான் தனது மனைவி, குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக துபாயில் இருப்பதாகவும் எனவே வழக்கை திரும்ப பெருமாறும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.கே.சுரேஷ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகு சுமார் 7 நாட்கள் கழித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயிலிருந்து சென்னை திரும்பிய ஆர்.கே.சுரேஷிடம் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது நீதிமன்ற உத்தரவின்படி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஆஜராக வந்திருப்பதாக அவர்களிடம் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்ததையடுத்து, விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சூழலில் நேற்று சென்னை அசோக் நகரில் உள்ள மாநில பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆர்.கே.சுரேஷ் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது. அதன்படி அவர் ரூசோவிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அதாவது, தயாரிப்பாளர் ரூசோவிடம் வங்கி கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ள நடிகர் ஆர் கே சுரேஷ், ரொக்கமாகவும் கோடிக்கணக்கில் ரூசோவிடமிருந்து பணம் பெற்று இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் ரூசோவிடமிருந்து பெறப்பட்ட பணத்தை திரைப்படத்திற்கு மட்டுமல்லாமல் சொந்த செலவிற்கும், கட்சி நிகழ்ச்சிக்கும் ஆர்.கே.சுரேஷ் செலவழித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து துபாயில் கைது செய்யப்பட்டுள்ள ஆருத்ரா நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜசேகரை, நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாயில் சந்தித்தாரா என்பது குறித்து எல்லாம் நேற்றைய தினம் ஆர்.கே.சுரேஷ் இடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். தயாரிப்பாளர் ரூசோவிற்கும் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கும் இடையே உள்ள சினிமா பட ஒப்பந்தம் குறித்து ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணைக்கு எடுத்து வரச் சொல்லி உள்ளனர்.

ஆர்.கே.சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை திங்கட்கிழமை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் அளிக்க உள்ளனர். தொடர்ந்து அவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் 2-வது நாளாக இன்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோசடியில் மேலும் யார் யாருக்கு தொடர்பு இருப்பது என்பதும் விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Also Read: ”நாடாளுமன்றத்திலேயே உண்மையை மறைக்கும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்” : பினராயி விஜயன் குற்றச்சாட்டு!