Tamilnadu

ஆருத்ரா பண மோசடி வழக்கு : பா.ஜ.க நிர்வாகி ஆர்.கே.சுரேஷிடம் 6 மணி நேரம் தீவிர விசாரணை!

ஆருத்ரா கோல்ட் நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக்கூறி சுமார் ஒரு லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடிவரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மோசடியில் திரைப்பட நடிகரும் பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணை தலைவருமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதை திரும்பப் பெறக்கோரி, ஆர்.கே. சுரேஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆருத்ரா மோசடிக்கும் தனக்கும் தொடர்பில்லை எனவும், மனைவி, குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக துபாயில் இருப்பதாகவும் தெரிவிதார். சென்னை உயர்நீதிமன்றம் ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இதற்கிடையில் துபாயிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பிய ஆர்.கே.சுரேஷிடம் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது நீதிமன்ற உத்தரவின்படி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஆஜராக வந்திருப்பதாக அவர்களிடம் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்தார். பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அவருக்கு குடியுரிமை அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

இந்த நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள மாநில பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆர்.கே.சுரேஷ் ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரத்திற்கு மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோசடியில் மேலும் யார் யாருக்கு தொடர்பு இருப்பது என்பதும் விரைவில் வெளிவரும் என்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் தெரிவித்துள்ளனர்.

Also Read: ”வாயால் வடை சுடுவதை பா.ஜ.கவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” : CPI முத்தரசன் எச்சரிக்கை!