Tamilnadu

செங்கல்பட்டு அருகே தடம் புரண்ட சரக்கு ரயில்.. தாமதமான தென்மாவட்ட ரயில்கள் : புறநகர் ரயில் சேவை பாதிப்பு !

விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை 30-க்கும் மேற்பட்ட பெட்டிகளுடன்சரக்கு ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கும், பரனூர் ரயில் நிலையத்திற்கும் இடையே சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது.

இந்த விபத்தில் சரக்கு ரயிலில் சுமார் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி விபத்துகுள்ளானது. அதனைத் தொடர்ந்து இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் சென்ற நிலையில், அந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

தொடர்ந்து தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டிகளை அப்புறப்படுத்தி தண்டவாளத்தை சீர் செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது. சுமார்100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ரயில் பெட்டிகள் மீண்டும் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக காலை 7 மணிக்கு சென்னை எழும்பூர் வரவேண்டிய நெல்லை அதிவிரைவு ரயில், காலை 7.10-க்கு எழும்பூர் வரவேண்டிய சேது அதிவிரைவு ரயில், காலை 7:20 மணிக்கு வரவேண்டிய எழும்பூர் விரைவு ரயில், 7.35-க்கு வர வேண்டிய முத்து நகர் அதிவிரைவு ரயில்கள் போன்ற தென்மாவட்ட ரயில்கள் தாமதமாக சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறது.

ரயில் பெட்டிகள் தடம் புரண்டதன் காரணமாக சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் இயக்கம் தொடர்ந்து தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியதால், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக காலை பணிக்கு, கல்லூரிக்கு செல்ல வேண்டியவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

Also Read: அதானிக்காக ஜனநாயகப் படுகொலையை பா.ஜ.க. பட்டவர்த்தனமாகவே நடத்துகிறது - முரசொலி விமர்சனம் !