Tamilnadu

”ரூ.6000 கோடிக்கு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?”: எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்யா நகர் பகுதி மக்கள் 1100 பேருக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பணிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "அ.தி.மு.க ஆட்சியில் 2015 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கையில் ரூ.6,500 கோடி ரூபாய் மழை நீர் வடிகாலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளதாகச் சட்டமன்ற குறிப்புகளிலேயே உள்ளது.

இன்று வெள்ளை அறிக்கை கேட்கும் கருப்பு உள்ளம் கொண்ட அந்த எடப்பாடி பழனிசாமி 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, "எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு மழை தண்ணீர் கூட தேங்காது என்றும் ரூ.6000 கோடிக்கு நாங்கள் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்" என்று பேசினார்.

ஆனால் உண்மை என்ன 2021 ஆம் ஆண்டு பெய்த மழையின் போது, 50% மழைக்குக் கூட சென்னை தாங்காமல் தத்தளித்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, ரூ. 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதலமைச்சர் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்றது. இங்கு எங்கெல்லாம் பணிகள் நடைபெற்று இருக்கிறது என்பதை துறையின் அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது வெள்ளை அறிக்கை கேட்கும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க ஆட்சியில் ரூ.6000 கோடி செலவு செய்ததற்கான வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?

தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அங்கு இயல்பு வாழ்க்கை உடனே திரும்பும். 95% பகுதிகளில் தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி இருக்கிறது. சென்னையில் மட்டும் 20000 மேற்பட்ட வெளி மாவட்ட பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மருத்துவ முகாம்களும் நடந்து வருகிறது. குப்பைகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து கொண்டிருக்கிறது." என தெரிவித்துள்ளார்.

Also Read: வெள்ளத்தால் சேதமடைந்த வாகனங்களுக்கு உடனே காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் : அமைச்சர் உத்தரவு!