Tamilnadu

அன்புதான் எல்லாம் : மிக்ஜாம் புயல் மீட்பு பணியின் போது இணையத்தில் வைரலான காவலர் யார்?

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதனால் மக்களுக்கு பெரிய பேராபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துரைப்பாக்கம் பகுதியில் காவலர் தயாளன் என்பவர் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு சிரித்த முகத்துடன் மழை வெள்ள நீரில் சென்றுள்ளார். இதை யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி காவலர் தயாளனின் அன்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இது குறித்து பேசும் காவலர் தயாளன், "காவல் துறையில் கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். மிக்ஜாம் புயலால் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் துரைப்பாக்கத்தில் உள்ள வி.பி.ஜி அவென்யூ அருகில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 1,000 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டு இருந்தோம். அப்போது கைக்குழந்தையுடன் ஒரு அம்மா தண்ணீரில் நடந்து வந்தார்.

அவரிடமிருந்து குழந்தையை நான் வாங்கினேன். அப்போது அவர், 'உங்களை பார்த்து குழந்தை பயப்பட போகுது' என்றார். நான், 'பயப்படாதீங்கம்மானு' சொல்லிட்டு குழந்தையோடு ஜாலியா பேசிட்டே வந்தேன். அப்போது அந்த குழந்தை என்னை பார்த்துச் சிரித்தது. நானும் குழந்தையை பார்த்துச் சிரித்தேன்.

குழந்தை சிரிப்பை பார்த்ததும் வேலை செய்த களைப்பே தெரியவில்லை. குழந்தையோடு நான் இருக்கும் புகைப்படம் இந்த அளவிற்கு வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை "என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Also Read: “தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் பெருமளவில் தவிர்ப்பு” - முதலமைச்சர்!