Tamilnadu

நேற்று முதலமைச்சர் விடுத்த கோரிக்கை : இன்று முதற்கட்டமாக ரூ.450 கோடியை விடுவித்த ஒன்றிய அரசு!

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர்.

கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் மீட்பு மற்றும் விசாரணை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களைச் சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ. 5060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். மேலும் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட ஒன்றிய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த கடிதத்தை அடுத்து இன்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ள சேத பாதிப்புகளைப் பார்வையிட்டார். பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது முதலமைச்சர் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்து, இடைக்கால நிதியுதவி கோரும் கோரிக்கை மனுவை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வழங்கினார்.

இதற்கிடையில் முதலமைச்சரின் இடைக்கால நிதி கடிதத்தை அடுத்து இன்று முதற்கட்டமாக ரூ.450 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. மேலும் சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடி ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

"கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மூன்றாவது பெரிய வெள்ளத்தைச் சென்னை எதிர் கொள்கிறது. வெள்ள மேலாண்மை திட்டத்தின் மூலம் வெள்ளத்தைத் தாங்கக்கூடிய வகையில் சென்னை வலுப்பெறும்" என்று சமூகவலை தளத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Also Read: 3 வது நாளாக களத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை - தொடரும் நிவாரண பணி!