Tamilnadu

2-ஆவது நாளாக தொடரும் மீட்பு பணி : 24 மணி நேரமும் மக்களை பாதுகாத்து வரும் தமிழ்நாடு அரசு!

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் நேற்று முன்தினம் இரவிலிருந்து அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர்.

மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த மீட்புப் பணிகள் நேற்று காலையிலிருந்து இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மடிப்பாக்கம், முடிச்சூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் நேற்று அறிவித்திருந்தார். இதையடுத்து இன்று ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மூர்த்தி, தா.மோ அன்பரசன், மனோ தங்கராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள் தொடர்ந்து மீட்பு பணிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

மேலும் ரூ.5060 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”ரூ. 5,060 கோடி உடனே தேவை” : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!