Tamilnadu
பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்பது ஒன்றே இலக்காக இருக்க வேண்டும்: தேர்தல் முடிவும் படிப்பினைகளும்- முரசொலி!
முரசொலி தலையங்கம் (06-12-2023)
தேர்தல் முடிவும் படிப்பினைகளும்!
‘அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை’ - என்பது தமிழ்ப் பழமொழிகளில் ஒன்று. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் இப்படித்தான் அமைந்துள்ளது.
• மத்தியப் பிரதேசம்
•இராஜஸ்தான்
•தெலுங்கானா
•சட்டீஸ்கர்
•மிசோரம்- ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களையும் பா.ஜ.க. கைப்பற்றி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி இருக்கிறது. மிசோரம் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த மிசோ தேசிய முன்னணி தோல்வி அடைந்துள்ளது. ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.
மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இரண்டு மாநிலங்களில் தோல்வி அடைந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம் பேர் தான். சட்டீஸ்கரில் 6 லட்சம் வாக்குகள்தான். மத்தியப் பிரதேசத்தில் மட்டும் தான் 35 லட்சம் வாக்குகளை கூடுதலாக பா.ஜ.க. பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கும் 2 விழுக்காடு வாக்குகள் தான் வேறுபாடு. சட்டீஸ்கரில் 4 விழுக்காடு, மத்தியப் பிரதேசத்தில் 8 விழுக்காடு வாக்குகள் வேறுபாடு ஆகும். தெலுங்கானாவில் பா.ஜ.க.வை விட 26 விழுக்காடு அதிகமான வாக்குகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. தெலுங்கானாவில் பா.ஜ.க. அடைந்த மாபெரும் தோல்வியை மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் அடைந்துவிடவில்லை என்றே சொல்ல வேண்டும்.
பா.ஜ.க.வை தெலுங்கானா நிராகரித்திருக்கிறது. மிசோரமில் பா.ஜ.க. வின் கூட்டணிக் கட்சியே பா.ஜ.க.வை நிராகரித்தது. அபரிதமான – மகத்தான வெற்றி என்று சொல்லத் தக்க வாக்குகளை பா.ஜ.க. பெறவில்லை.
பொதுவாகவே மாநில சட்டமன்றத் தேர்தல்களில் உள்ளூர் பிரச்சினைகளே முக்கியத்துவம் பெறும். அந்த வகையில் பா.ஜ.க. அடைந்துள்ள மூன்று மாநில வெற்றிகளை, அந்தந்த மாநிலக் களநிலவர வெற்றிகளாகத்தான் பார்க்க வேண்டும். மோடியை பிரதமர் ஆவதற்கான தேர்தல் அல்ல இவை. சொந்த மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியா, காங்கிரஸ் ஆட்சியா என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல் இது. இந்த தேர்தல் முடிவுகளை அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கோணங்களில் விமர்சிக்கிறார்கள்..
•‘இந்தியா’ கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் தனித்தனியாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் போட்டியிட்டுள்ளன. சமாஜ்வாதியும், ஆம் ஆத்மியும் அரவணைக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு எதிரான GGP கட்சியும் இக்கூட்டணிக்குள் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். முந்தைய சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்குமான வாக்கு வேறுபாடு 1 விழுக்காடுக்கும் குறைவுதான். சிறிய கட்சிகளை காங்கிரஸ் கட்சியானது தேர்தலுக்கு முன்பே ஒன்றிணைத்திருக்க வேண்டும்.
•ராஜஸ்தான் மாநிலத்திலும் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி,இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைத்திருக்க வேண்டும்.
•சட்டீஸ்கர் மாநிலத்திலும் இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி, இவர்களை ஒன்றிணைத்திருக்க வேண்டும்.அதாவது பா.ஜ.க. வுக்கு எதிரான கட்சிகள், அதனுடைய வாக்குகள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைத்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லி வரும் கூட்டணி வியூகம்தான் வெல்லும் வியூகம் ஆகும். அதனை மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இதுவரை அடைந்த அனைத்து வெற்றிக்கும் இதுதான் காரணம். 2019 நாடாளுமன்றத் தேர்தல்,2021 சட்டமன்றத் தேர்தல், இடையில் நடந்த 13 தொகுதி இடைதேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள் ஆகிய அனைத்திலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற ஒருங்கிணைந்த கூட்டணியை முதலமைச்சர் அவர்கள் உருவக்கினார்கள். தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு இந்த ஒற்றுமைதான் அடிப்படைக் காரணம்.
‘‘பலதரப்பட்ட கட்சிகள் இங்கு இருக்கிறது.அனைத்துமே அகில இந்தியக் கட்சிகள் அல்ல. அதனால் இந்தியா முழுமைக்குமான ஒரே மாதிரியான கூட்டணியை நாம் உருவாக்க முடியாது.எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். தொகுதி பங்கீடுகளைச் செய்து கொள்ளலாம்.மாநில இந்திய ரீதியாகப் பேசுவதை விட மாநில ரீதியாகப் பேசுவது எளிமையாகக் கூட இருக்கலாம் என நினைக்கிறேன்.
இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகள் - ஒரு மாநிலத்தில்சம விகித செல்வாக்குடன் இருந்தால், அந்த மாநிலங்களில் கூட்டணித் தலைமைஎன இல்லாமல் தொகுதி பங்கீடு என்ற வகையில் பங்கீடுகளைச் செய்து கொள்ளலாம். ஆனால் பிரிந்து நிற்கக் கூடாது. பா.ஜ.க.வுக்கு எதிரான இரண்டு மதச்சார்பற்ற கட்சிகள் எந்த மாநிலத்திலும் எந்தத் தொகுதியிலும் எதிரெதிராகப் போட்டியிடக் கூடாது.
ஒரு கட்சித் தலைமையில் கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகியவை செய்ய முடியாத அளவுக்கு இரண்டு கட்சிகளுக்குள் கொள்கை மோதல் இருக்குமானால் பொது வேட்பாளர் என்பதை அறிவிக்க வேண்டும். எங்கும் எந்தச் சூழலிலும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் அரசியல் இலக்குக்கு எந்தவொரு தொகுதியிலும் இடையூறு ஏற்படக் கூடாது. அதில் கவனமாக இருக்க வேண்டும். நமது அணியில் சேராத - ஆனால் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்க்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவற்றையும் எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும். தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது. சேர்ந்து போட்டியிட வேண்டும், வெற்றி பெற வேண்டும், ஆட்சி அமைக்க வேண்டும்”- என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பலமுறை வலியுறுத்தி இருக்கிறார்கள். அவர்கள் சொன்னதைத்தான் இந்த மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் உறுதி செய்துள்ளது.
நடந்தவை மாநில சட்டமன்றத் தேர்தல்கள் தான். நடக்க இருப்பது நாடாளுமன்றத் தேர்தல். மிகுந்த எச்சரிக்கையுடனும், பொறுப்பு உணர்வுடனும் செயல்பட வேண்டிய காலக்கட்டம் இது. பா.ஜ.க. வீழ்த்தப்பட வேண்டும் என்பது ஒன்றே இலக்காக இருக்க வேண்டும்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்