Tamilnadu

நாளைக்குள் முழுமையாக தொலைதொடர்பு சேவை, பழுதான வாகனங்களுக்கு சிறப்பு முகாம் - தலைமை செயலாளர் கூறியது என்ன?

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர்.

மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த மீட்புப் பணிகள் காலையிலிருந்து இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு, தற்போது வரை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அரசின் மீட்புப்பணிகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர்கள் மொத்தமாக, 25,000 பேர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இது தவிர, மின்சார வாரியம், தீயணைப்புத் துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை என மற்ற மாவட்டங்களிலிருந்தும் பணியாளர்கள் அழைத்து வரப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு சுமார் 75,000 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

மொத்தமாக, 372 நிவாரண முகாம்கள் செயல்பட்டுவருகிறது. இதில், 41,406 பேர் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு, உணவு உள்ளிட்டவை தொடர்ந்து அரசால் வழங்கப்பட்டுவருகிறது.மேலும், தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் வீட்டிலிருப்பவர்களுக்கும் சேர்த்து என மொத்தமாக 37 லட்சம் உணவுப் பொட்டலங்களை நாங்கள் விநியோகம் செய்திருக்கிறோம்.

அத்தியாவசிய பொருளான பால் பொறுத்தவரையில் தினம் தோறும் வழங்கப்படும் 19 லட்சம் லிட்டரில் இன்று 14 லட்சம் லிட்டர் வழங்கபட்டுள்ளது. நாளை முதல் வழக்கமான அளவிற்கு பால் விநியோகம் செய்யப்படும். மற்ற மாவட்டங்கள் மூலம் 6,280 கிலோ பால் பவுடர் பெறப்பட்டு மக்களுக்கு வழங்கபட உள்ளது. மற்ற மாவட்டங்களின் உதவி மூலம் 50 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள், 20 ஆயிரம் 20 லிட்டர் தண்ணீர் கேன்கள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து 34 ஆயிரம் bread பாக்கெட்டுகள் பெறப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. சென்னையை பொறுத்தவரை பேருந்துகள் செல்லும் 56 சாலைகளில் மட்டுமே தண்ணீர் உள்ளது இருப்பினும் அனைத்து வழித்தடத்திலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 900 பெட்ரோல் டீசல் நிலையங்களில் தற்போது வரை 830 செயல்ப்பட்டிற்கு வந்துள்ளது மேலும் நாளை அனைத்து நிலையங்களும் செயல்ப்பாட்டிற்கும் வரும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் மொத்தமாக 866 இடங்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. இந்தப் பகுதிகளிலிருந்து சுமார் 19,000 பேர் படகு உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்பு படையும் சேர்த்து 850 பேர் கொண்ட 34 குழு மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட வாகனங்களை சரிசெய்ய இலவச முகாம்கள் நடத்த வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மழை வெள்ளத்தால் இழந்த முக்கிய ஆவணங்களை திரும்ப பெற்றுக்கொள்ளும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தைப் பொறுத்தவரையில், அனைத்து பகுதிகளிலும் மின்சாரத்தை வழங்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் மின்சாரத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கியிருக்கும் போது மின்சாரத்தை வழங்கினால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

சென்னையைப் பொறுத்தவரையில் நான்கு சதவிகித பகுதிகளில் மட்டும் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டது. அதேபோல் தாம்பரத்தில் 5.64 சதவிகித பகுதிகளிலும், திருவள்ளூரில் 7.85 சதவிகித பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நேற்று முந்தினம் 112 மெகாவாட் மின் நுகர்வு இருந்த நிலையில், தற்போது வரை 1900 மெகவாட்டாக மின்சார நுகர்வு அதிகரித்துள்ளது.

மழை, புயல் காரணமாக இதுவரை 9 உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இதில் சென்னையில் நான்கு, செங்கல்பட்டில் ஐந்து. இது தவிர 311 கால்நடைகள் உயிரிழந்திருக்கின்றன. மேலும் 108 குடிசை வீடுகள் முழுமையாகவும் 35 வீடுகள் பாதியளவு 88 வீடுகள் லேசாகவும் பாதிப்படைந்து இருக்கின்றன. தெற்கு சென்னை வடசென்னையின் சில பகுதிகளில் தண்ணீர் இன்னும் வடியவில்லை. அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அந்த நிலைமையும் விரைவில் சீரமைக்கப்படும் என்பதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களைத் தேவைக்கு மேல் வாங்கி வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது" என்று கூறினார்.

Also Read: அ.தி.மு.க.வுக்கு தி.மு.க. ஆட்சியை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை" - KS அழகிரி விமர்சனம் !