Tamilnadu

உபரி நீரில் அடித்து செல்லப்பட்ட கார் - சிறுமி உட்பட 3 பேரை காப்பாற்றிய போலிஸ்: திக் திக் சம்பவம்!

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் முகமது ரபிக். இவர் தனது மனைவி ரிஸ்வான் மற்றும் மகள் ஷோபிஸான் ஆகியோருடன் காரில் மவுலிவாக்கம் சென்றுள்ளார். பிறகு அங்கிருந்து தீட்டிற்கு காரில் திரும்பி கொண்டு இருந்தனர்.

இவர்கள் குரோம்பேட்டை செல்ல மவுலிவாக்கத்தில் இருந்து குன்றத்தூர் சென்று பல்லாவரம் சாலை வழியாக செல்ல வேண்டும். ஆனால் விரைவாகச் செல்ல வேண்டும் என எண்ணி மாங்காடு அருகே தரப்பாக்கம் பகுதி வழியாக சென்றுள்ளனர்.

அப்போது, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் செல்லும் கால்வாயைக் கடக்க முகமது ரபிக் முயற்சி செய்துள்ளார். ஆனால் கார் சாலையில் செல்லாமல் கால்வாயில் அடித்துச் சென்றது. இரவு நேரம் என்பதால் அங்கு யாரும் இல்லாத காரணத்தால் தரைப்பாலத்தில் இருந்து 50 மீட்டாருக்கு கார் அடித்துச் சென்று அங்குள்ள முட்புதரில் சிக்கி நின்றது. பின்னர் காரில் இருந்த இருவரும் தனது மகளை காப்பாற்ற வேண்டும் என்று காரின் மீது சிறுமியை அமர வைத்துள்ளனர். கணவன் மனைவி இருவரும் காரைப் பிடித்தவாறு தண்ணீரில் தத்தளித்தனர்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தண்ணீரில் கார் அடித்துச் சென்றதைக் கண்டு அருகே பாதுகாப்பிலிருந்து போலிஸாருடன் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு மாங்காடு காவல் ஆய்வாளர் முத்துராமன் தலைமையில் வந்த காவல் துறையினர் அப்பகுதி மக்கள் உதவியுடன், உடனடியாக கயிறு கட்டி காரில் இருந்த மூன்று பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

தங்களது உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் தண்ணீரில் சிக்கியவர்களை காப்பாற்றிய போலிஸார் சந்தோஷ் குமார், மணிகண்டன், லோகநாதன், மணிகண்டன், வெங்கட் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Also Read: 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : குற்றவாளிக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி!