Tamilnadu
“ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது; வெறும் NOMINEE தான்..” -RN ரவிக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில்கூட ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறார். தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்துள்ள மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் இழுத்தடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள், மக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் சூழலிலும், ஆளுநர் தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறார்.
இதனால் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், அரசு நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக குற்றம் சாட்டி தமிழ்நாடு அரசு, கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக 198 பக்க மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு கடந்த நவம்பர் 10-ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் இருப்பது குறித்தும், கால தாமதம் குறித்தும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆளுநரின் செயலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. அதோடு ஆளுநரின் செயல் வேதனை அளிப்பதாக தெரிவித்த உச்சநீதிமன்றம், அரசமைப்பு சட்டம் 200-ன் படி ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது. தொடர்ந்து ஆளுநர் முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும் ஆளுநருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
மேலும் ஆளுநரின் செயல் ஜனநாயகத்துக்கு ஆபத்தனது என்று கருத்து தெரிவித்த நீதிபதி, ஆளுநர் தீயுடன் விளையாடுவதாகவும் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கை 20-ம் தேதிக்கு ஒத்திவைத்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து பயந்த ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சென்னை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா, தமிழ் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா உள்ளிட்ட10 மசோதாக்களை 2 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றுவதற்காகச் சிறப்புச் சட்டமன்ற கூட்டம் கடந்த நவ.18-ம் தேதி நடைபெற்று, மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சூழலில் நவம்பர் 10-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆளுநருக்கு மூன்று சாத்தியங்கள்தான் உள்ளது என்றும், மசோதாக்களை அவர் ஒப்புக் கொள்ளலாம், நிறுத்தி வைக்கலாம், அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பலாம் என்று ஆளுநரின் அதிகார வரம்புகள் உள்ளிட்டவையை கூறி ஆளுநர் போக்கிற்கு கண்டனம் தெரிவித்திருந்தது உச்சநீதிமன்றம்.
மேலும் "சட்டமன்றம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ள 10 மசோதாக்கள் மீது எப்போது முடிவு எடுக்கப்படும் என்பதை ஆளுநர் தெரிவிக்க வேண்டும். மேலும் தற்போது முடிவு எடுக்காமல் உள்ள மசோதாக்கள் குறித்தும் வரும் 29-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்." என்றும் நீதிபதி உத்தரவிட்ட நிலையில், வழக்கு டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 1) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சரை அழைத்து 10 மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி, டிசம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னதாக ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் கருத்துகள் பின்வருமாறு :
“ஆளுநருக்கு சட்டத்தை செயலிழக்க (kill the bill) செய்யவோ முடக்கி வைக்கவோ அதிகாரம் இல்லை. ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது; ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர். அரசியல் சாசனத்திற்கு ஏற்ப அவர் செயல்பட வேண்டும்.
ஆளுநருக்கு மசோதாக்களை நிறுத்தி வைக்க தனிப்பட்ட அதிகாரம் இருக்கிறதா? இந்தியாவின் குடியரசுத் தலைவர் மக்கள் பிரநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர். இதனால் அவருக்கான அதிகாரங்கள் விரிவானது. ஆனால், மாநிலங்களின் ஆளுநர்கள் ஒன்றிய அரசின் NOMINEE தான். இதனை ஆளுநர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதற்காக சட்ட மசோதாக்கள் முடக்கி வைக்க முடியாது. தமிழ்நாடு ஆளுநர் ரவி, தமிழ்நாடு முதலமைச்சரை அழைத்து மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும்.”
இதனிடையே முதலமைச்சர் சென்று ஆளுநரை சந்திக்க வேண்டும் என்று அட்டனி ஜெனரல் வலியுறுத்தியபோது, அதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் முதலமைச்சரை அழைத்து மசோதாக்கள் தொடர்பாக சந்தேகம் இருந்தால் அதனை தெளிவுபடுத்தி உரிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடபட்டுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!