Tamilnadu
”எவ்வளவு பெரிய கன மழையை எதிர்கொள்ளவும் சென்னை தயார்” : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
சென்னையில் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்குக் கனமழை விடாமல் பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
உடனே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியை வேகப்படுத்தினர். அதேபோல் போக்குவரத்து போலிஸாரும் கனமழை பெய்து கொண்டிருந்தபோதும் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்தனர்.
இதற்கிடையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர், பொது மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நேற்று இரவிலிருந்தே ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் தனது தொகுதிகளில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "சென்னையில் நேற்று மாலை 90 நிமிடங்களில் 15 செ.மீ மழை பெய்துள்ளது. ரூ. 2400 கோடி அளவில் புதிய மற்றும் பழைய மழைநீர் வடிகால் மேற்கொள்ளும் பணி முடிவடைந்துள்ளது. இதனால் பரவலாகச் சாலையில் மழை நீர் தேங்கவில்லை.
வால்டாக்ஸ் மற்றும் பிரகாசம் சாலையில் கடந்த ஆண்டுகளில் பருவமழையின் போது இடுப்பளவுக்குத் தண்ணீர் தேங்கும். ஆனால் திமுக அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது அப்பகுதியில் தண்ணீர் தேங்கவில்லை. மின்வாரியம், குடிநீர் வாரியம் என அனைத்துத்துறைகளும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
புளியந்தோப்பு, பட்டாளம் போன்ற பகுதிகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. 50 ஆண்டுகளுக்கும் மேல் மழைநீர் தேங்கிய பகுதிகளான சூளை, ஆட்டுதொட்டி, பெரம்பூர் பேரக்ஸ் சாலை போன்ற இடங்களில் முதலமைச்சர் மேற்கொண்ட தொடர் ஆய்வால் தற்போது தண்ணீர் தேங்காத இடமாக மாறியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை நீர் அகற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. எவ்வளவு பெருமழையைச் சமாளிக்கவும் சென்னை முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!