Tamilnadu

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியை அசுத்தமாக்கும் பாஜக பிரமுகர்.. - பொதுமக்கள் பரபர புகார் !

திருப்பெரும்புதூர் அருகே காட்டரம்பாக்கம் பகுதியில் பாஜக பிரமுகருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி செயல்படும் தனியார் கேன்டீன் உணவு கழிவுகள் மற்றும் கழிவு நீரை பொதுப்பணிதுறைக்கு சொந்தமான ஏரியில் விடுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்டு இருக்கிறது காட்டரம்பாக்கம் ஊராட்சி. இங்கு எந்த வித உரிமம் மற்றும் அரசு அனுமதியின்றி பா.ஜ. க பிரமுகர் ஜானகிராமன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் foodexo என்ற பிரபல தனியார் கேன்டீன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கேண்டின் மூலம் காட்டரம்பாக்கம் மற்றும் திருப்பெரும்புதூர் சுற்றியுள்ள பல தொழிற்சாலைகளுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது.

நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் இங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த கேன்டீனில் இருந்து வெளியேறும் எண்ணெய், உணவு கழிவுகள், மற்றும் மனித கழிவுகளை பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காட்டரம்பாக்கம் ஏரியில் பாஜக பிரமுகர் ஜானகிராமன் துணையுடன் விடுவதாகவும், இதனால் ஏரி அசுத்தமாக இருப்பதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனால் ஏரியில் துர்நாற்றம் வீசுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதாகவும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். அதோடு பலமுறை ஊராட்சி பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பாக நீரநிலையை மாசுபடுத்த கூடாது கழிவு நீரை விடக்கூடாது என்று பாஜக பிரமுகர் ஜானகி ராமன் மற்றும் தனியார் கேன்டீன் நிர்வாகத்திடம் கூறியும் அலட்சியமாக இருப்பதாகவும், தொடர்ந்து கழிவுகளை ஏரியில் கலக்கும் வகையில் விடுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதுமட்டுமின்றி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காட்டரம்பாக்கம் ஏரி கனமழை காரணமாக அதன் முழு கொள்ளளவை தற்போது எட்டியுள்ள நிலையில், அதன் உபரி நீர் வெளியேறி செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது. ஏரியில் கலக்கும் இந்த கழிவுகள் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றடைவதால் சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரியும் மாசடைகிறது.

இதனால் நீர் நிலைகளை மாசுபடுத்தும் பாஜக பிரமுகர் ஜானகிராமன், தனியார் கேண்டின் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு நீர்நிலைகளை மாசுபடுத்தும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: ”எவ்வளவு பெரிய கன மழையை எதிர்கொள்ளவும் சென்னை தயார்” : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!