Tamilnadu

புத்தகத்தை கொடுத்து முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி : அப்படி என்ன ஸ்பெஷல் அந்த புத்தகத்தில் ?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தி.மு.க தொண்டர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து தனது பிறந்த நாள் வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூத்த வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன் எழுதிய 'குடியரசுத் தலைவர், ஆளுநர் அதிகாரங்கள்' என்ற புத்தகத்தை முதலமைச்சரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.

தற்போது இந்த புத்தகம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்குக் காரணம் ஒன்றியத்தில் இருக்கும் பா.ஜ.க அரசு ஆளுநர்களை வைத்து எதிர்க்கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் எப்படியான மோதல் போக்கை உருவாக்கி வருகிறது என்பதை நாடே இன்று பார்த்து வருகிறது. இதனால் ஆளுநர்களுக்கு என்ன தான் அதிகாரம் இருக்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உச்சநீதிமன்றம் கூட ஆளுநர்களுக்கான அதிகாரம் இதுதான் என்பதைப் பல வழக்குகளில் சுட்டி காட்டிவிட்டது. தற்போது கூட பஞ்பாப் அரசு தொடர்ந்த வழக்கில், "சட்டப்பேரவைகளின் சட்டமியற்றும் அங்கீகாரத்தை நசுக்குகின்ற வகையில் ஆளுநரின் அதிகாரம் பயன்படுத்தப்படக் கூடாது" என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன் எழுதிய குடியரசுத் தலைவர், ஆளுநர் அதிகாரங்கள்' என்ற புத்தகத்தில் உள்ள சில முக்கிய அம்சங்களை இங்கு பார்ப்போம்:

அரசமைப்பு சட்டப்படிதான் ஆளுநர் தன் அதிகாரத்தைச் செலுத்த முடியும். அரசமைப்புச் சட்டப்படி என்றால் என்ன பொருள்?. அமைச்சரவையின் முடிவுப்படி செயல்படுத்து என்று பொருள். எனவே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கும் அதிகாரம் உண்மையில் சுயமானது அல்ல. அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டப்பட்டது. அதை நிறைவேற்றுவது.

ஆளுநரின் ஒப்புதலைப் பெற ஒரு சட்ட முன்வடிவம் அவருக்கு சமர்ப்பிக்கப்பட்டால் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சட்ட முன் வடிவமும், ஆளுநரின் ஒப்புதலும் வரைவுச் சட்டம் 175 அரசமைப்பு சட்டகூறு 200ல் விளக்கப்பட்டுள்ளது.

அதில், "சட்ட முன் வடிவத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தரலாம். இல்லை என்றால் சட்ட முன் வடிவத்தில் உள்ள சிலவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறி அல்லது தான் திருத்தம் செய்ய வேண்டும் என உசிதம் என்று கருதுபவற்றைக் குறிப்பிட்டு சட்ட முன் வடிவத்தைத் திருப்பி அனுப்பலாம். அவ்வாறு சட்ட முன் வடிவம் திருப்பி அனுப்பப்பட்டால், சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவை அதைப் பரிசீலனை செய்து இரு அவைகளும் சட்ட முன் வடிவத்தை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மீண்டும் அனுப்பி வைக்கப்பட்ட சட்ட முன் வடிவத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருக்க முடியாது." என இந்த நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்படித்துப் பார்க்கும் போது மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் கொடுத்தாக வேண்டும் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

இப்படி இந்த நூலில் ஒவ்வொரு பக்கத்திலும் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை அரசியலமைப்பு சட்டத்தின் கூறுகளை விளக்கி எடுத்துக் கூறியுள்ளார் சிகரம் ச.செந்தில்நாதன். மேலும் ஆளுநர்கள் தொடர்பான வழக்குகளையும் மேற்கோள்கள் காட்டியுள்ளார்.

"ஆளுநர்களுக்கு அரசமைப்புச் சட்டம் குறைந்த அளவுக்கு அதிகாரம் வழங்கி இருந்தாலும், அதை நல்ல ஆளுநராக இருந்தால் பெரும் அளவிற்கு நல்லது செய்ய முடியும். அதுவே கெட்டவராக இருந்தால் பெரும் அளவு விஷமத்தனம் செய்ய முடியும்" என்று நூலின் ஒரு இடத்தில் வருகிறது. இதைப்படிக்கும் போது தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி நல்லவரா? கெட்டவரா என்பதை சட்டம் படிக்காதவர்கள், தெரியாதவர்கள் கூட தெரிந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு இந்நூல் குடியரசுத் தலைவருக்கும், ஆளுநர்களும் என்ன அதிகாரம் உள்ளது என்பதை புட்டுபுட்டு வைக்கிறது.

Also Read: அன்று வெற்றிக்கு வித்திட்ட செங்கல்: நாடாளுமன்ற தேர்தலுக்கு நீட் 'முட்டை' - உதயநிதி ஸ்டாலின் அரசியல் பயணம்