Tamilnadu
குட்கா விற்பனையை தடுக்க 247 குழுக்கள் : அதிரடியாக களத்தில் இறங்கும் தமிழ்நாடு அரசு!
தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யப்படுவது குறித்து ஆய்வு 247 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்வது குறித்த தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006 –ன் படி, கடந்த 23.05.2013 முதல் புகையிலை மற்றும் நிகோடினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை அமுல்படுத்தியது. இதனை வருடந்தோறும் நீட்டித்து வருகிறது. அதனடிப்படையில் 23.05.2023 முதல் இத்தடையாணையை ஓராண்டு நீட்டித்து உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அவர்களால் உத்திரவிட்டுள்ளது.உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் புகையிலை மற்றும் நிகோடினை சேர்மமாக கொண்ட உணவு பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், வாகனங்களில் எடுத்து செல்லுதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களைக் கொண்டு 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகள், மாவட்ட அளவில் நியமன அலுவலர் மற்றும் நகராட்சிகள், வட்டார அளவில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து தமிழகம் முழுவதும் 247 குழுக்கள் அமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது.
இதன்படி பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் சுற்றியுள்ள உணவு வணிக நிறுவனங்கள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றில் ஆய்வுமேற்கொள்ள வேண்டும். ஒரு வாரத்திற்கு 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.ஒரு முறைக்கு மேல் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் குற்றச் செயலில் ஈடுபடும் உணவு வணிகர்களின் உரிமம்/ பதிவுச் சான்றினை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் -2006 மற்றும் ஒழுங்குமுறைகள்-2011 – ன் படி இரத்து செய்யப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக அவசர தடையாணை உத்திரவினை பெற்று தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்த கடையினை பூட்டி சீல் வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உணவு பாதுகாப்பு துறையினர் காவல் துறையுடன் இணைந்து தமிழகம் முழுவதும் 2,303 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 223 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டு 1,343 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் தோராய மதிப்பு ரூபாய். 4,63,839 ஆகும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 63 கடைகளின் உரிமம்/ பதிவுச் சான்று இரத்து செய்யப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 211 சிறு குற்ற செயல்கள் கண்டறியப்பட்டு ரூபாய்.1,10,3000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 29.10.2023 முதல் நாளது வரை உணவு பாதுகாப்பு துறையினர் காவல் துறையுடன் இணைந்து தமிழகம் முழுவதும் 6,356 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 442 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டு 1,816 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் தோராய மதிப்பு ரூபாய். 9,82,782ஆகும். இதுவரை 160 கடைகளின் உரிமம்/ பதிவுச் சான்று இரத்து செய்யப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 365 சிறு குற்ற செயல்கள் கண்டறியப்பட்டு ரூபாய்.1,93,6000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு துறையால் கடந்த 2021-2022 முதல் 6,48,057 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு 22,435 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டு 1,95,855 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் தோராய மதிப்பு ரூபாய். 12,99,26,293 ஆகும். 390 கடைகளின் உரிமம்/ பதிவுச் சான்று இரத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது செய்யப்பட்டுள்ளது. 286 கடைகள் அவசர தடையாணை உத்திரவு மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 9,864 சிறு குற்ற செயல்கள் கண்டறியப்பட்டு ரூபாய். 5,27,80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு துறையினரால் மாவட்டம் தோறும் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து உரிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த புகார்களை TN Food Safety Consumer App வாயிலாகவும், 9444042322 என்னும் எண்ணிற்கு வாட்ஸ்அப் வாயிலாகவும், பதிவு செய்யலாம். அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?