Tamilnadu
“நிர்மலா சீதாராமனுக்கு பக்தி இல்லை, எல்லாம் பகல் வேஷம்” : வெளுத்து வாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கழகத் தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24-11-2023) திருமங்கலம் கோபால் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை பின்வருமாறு :-
திருமங்கலம் கோபால், சரோஜினி தம்பதியருடைய அருமை மகன் கோ.ராஜ்குமார் அவர்களுக்கும், சாகுல் அமீது – வகிலாபானு இணையருடைய அருமை மகள் சா.சஜீ அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது.
இந்த மணவிழா நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், நான் தொடர்ந்து ஒவ்வொரு திருமண விழாக்களிலும் எடுத்துச் சொல்லக்கூடிய செய்தி அதுவும் சீர்திருத்த முறையில், சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணமாக இருந்தால், அந்தத் திருமணத்தில் நிச்சயமாக நான் எடுத்துச் சொல்வதுண்டு. இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள், சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணங்கள், 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால், அந்தத் திருமணங்கள் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தோடு நடைபெறமுடியாத ஒரு சூழ்நிலை.
ஆனால், 1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு, கழகம் முதன்முதலில் அரசு பொறுப்பேற்ற பிறகு, முதன்முதலில் சட்டமன்றத்தில் முதலமைச்சராக நுழைந்த அண்ணா அவர்கள் சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற அங்கீகாரத்தை நமக்கெல்லாம் பெற்றுத் தந்தார்கள். ஆகவே, இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்தச் சீர்திருத்தத் திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்கிற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது.
இது சீர்திருத்தத் திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணம் மட்டுமல்ல, இது ஒரு கலப்புத் திருமணம். அது மட்டுமல்ல, இது காதல் திருமணமாகத்தான் இருக்கும் என்று நிச்சயமாக நான் நம்புகிறேன். அந்த வகையில், நடைபெற்றிருக்கக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில், நானும், நம்முடைய கழகத்தின் பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய அண்ணன் துரைமுருகன் அவர்களும், பொருளாளர் திரு.பாலு அவர்களும், அதேபோல கழக முன்னோடிகள் எல்லாம் பங்கேற்று வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பாதுகாவலராக அவருடன் சென்று எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும், கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தலைவரை நிழல்போல் தொடரக்கூடிய ஒரு பாதுகாவலராக விளங்கியவர் நம்முடைய அன்பிற்குரிய சகோதரர் திருமங்கலம் கோபால் அவர்கள். அதுபோல், எப்படி பாதுகாவலராக கோபால் இருந்தாரோ, தலைவர் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கு டாக்டராக கோபால்தான் இருந்தார். இரண்டு கோபால்தான் தலைவரோடு நெருங்கி அருகில் தலைவரைப் பாதுகாத்து வந்தார்கள் என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
தலைவர் கலைஞருடைய கண் அசைவில் அவர் எதைச் சொல்லுகிறார், எதைச் சொல்லப்போகிறார், என்ன உத்தரவிடுகிறார், எதை நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்று தலைவர் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதல்ல, அவருடைய கண் அசைவிலேயே தெரிந்துகொண்டு அதை நிறைவேற்றும் ஆற்றலைப் பெற்றவர் நம்முடைய திருமங்கலம் கோபால்.
நான் மயிலைப் பகுதியில் கபாலீசுவரர் கற்பகம்பாள் திருமண மண்டபத்தில், இரண்டு திருமண நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருந்தபோது, நம்முடைய முதன்மைச் செயலாளர் திரு. நேரு அவர்கள் என்னுடன் வந்தார்கள். அவரிடத்தில், கோபாலை பற்றிக் காரில் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் சொன்னதை அப்படியே இங்கே பேசிவிட்டார். நேரு எப்போதும் ஸ்பீடு, எல்லோரும் சொல்வதைவிட அவர் சொல்லிவிட வேண்டும். பிறகுதான் தெரிந்துகொண்டேன். ஏன் இவரிடம் சொன்னேன் என்று நான் உணர்ந்தேன். அந்த அளவிற்கு ஆர்வத்தோடு அவரும் அதை எடுத்துச் சொன்னார்.
முதன்முதலாக, தலைவருக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே எனக்கு கோபால் அவர்கள் அறிமுகம் ஆனார். 1970-71-ஆம் ஆண்டில் மதுரையில், இளைஞரணி துவக்கப்பட்ட நேரத்தில், அப்போது என்னுடன் இருந்து எனக்கு துணை நின்றவர் நம்முடைய திருமங்கலம் கோபால் அவர்கள். எம்.ஜி.ஆர். அவர்கள் நம்முடைய கட்சியைவிட்டு பிரிந்து, ஒரு இடைத்தேர்தலை சந்தித்தோம். அப்போது ‘திண்டுக்கல் தீர்ப்பு’ என்ற பிரச்சார நாடகத்தில் நான் நடித்தேன். அந்த நாடகத்தை திருமங்கலத்தில் நடத்திக்கொண்டிருக்கிறோம்.
அதில் பல கலவரங்கள் ஏற்பட்டுவிடுகிறது. அதை அரசியலாக்க விரும்பவில்லை. அந்தக் கலவரம் ஏற்பட்ட நேரத்தில், எங்கிருந்து எப்படி வந்தார் யாரென்றே தெரியாது. கோபால் அவர்களை முன் பின் பார்த்ததுகூட கிடையாது. திருமங்கலத்தில் இருந்த கோபால் ஓடோடி மேடைக்கு வந்து என்னைப் பாதுகாத்து, அணைத்துக் காரில் என்னை ஏற்றிவிட்டு நான் தங்கியிருந்த இடத்திற்குப் பாதுகாப்பாக விட்டுச்சென்றார். அப்போதுதான் முதன்முதலாக அறிமுகம் ஆனவர். அதற்கு பிறகு என்னுடன் நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அடிக்கடி சென்னைக்கு வருவார். வாசலிலேயே நிற்பார், உள்ளேகூட வரமாட்டார். கோபாலபுரம் வீடு உங்கள் எல்லோருக்கும் தெரியும். வாசலில் இருக்கக்கூடிய திண்ணை, திண்ணையை ஒட்டிய ஜன்னலுக்கு அருகே சண்முகநாதன் உட்கார்ந்துகொண்டு டைப் செய்து கொண்டிருப்பார்.
அந்த ஜன்னல் திறந்திருக்கும். கோபால் அங்கே நின்றுகொண்டு என்னோடு, நம்முடைய சண்முகநாதனோடு, அங்கிருக்கக்கூடிய உதவியாளர்களிடம் பேசிக் கொண்டிருப்பார். இப்படியே, பேசி, பேசி, பழகி, பழகி தலைவரிடத்தில் அவரை அறிமுகப் படுத்தக் கூடிய ஒரு சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. அதற்குப் பிறகு தலைவரிடத்தில் அவரை அறிமுகப்படுத்தினேன். உடனே தலைவர் கேட்டார், ஆளைப்பார்த்தால் வாட்டஞ்சாட்டமாக இருக்கிறார், நமக்கு ஒரு பாதுகாப்புக்கு இவரை வைத்துக் கொள்ளலாமா? உடனே தலைவர் காலிலேயே விழுந்து, இது ஒன்று போதும், உங்களுக்குப் பாதுகாப்பாகக் கடைசி வரைக்கும் உயிர் போகின்ற வரைக்கும் நிச்சயமாக இருப்பேன் என்று சொன்னார். கடைசிவரைக்கும், உயிர்பிரிகிற வரைக்கும் தலைவரோடு இருந்தவர்தான் நம்முடைய திருமங்கலம் கோபால் அவர்கள். அதைத்தான் நான் எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
கோபால் அவர்களுடைய துணைவியார் நன்றியுரை ஆற்றுகிறபோது, சில செய்திகள் எல்லாம் எடுத்துச் சொன்னார். கோபால் அவர்களின் திருமணத்தையும் தலைவர்தான் நடத்தி வைத்திருக்கிறார். அவர்களுடைய மூன்று பிள்ளைகளுக்கும் தலைவர்தான் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். தற்போது, நான்காவது மகனுக்குத் திருமணத்தை நான் நடத்தி வைத்திருக்கிறேன். ஒருவேளை அடுத்தது, மகன்களுக்கு பிறக்கக்கூடிய பேரன், பேத்திகளுக்கும் நான்தான் திருமணத்தை நடத்தி வைப்பேன் என்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கு இருக்கிறது. அந்த அளவிற்கு நாங்கள் உரிமையைப் பெற்றவர்கள். அந்த அளவிற்கு எங்கள் மீதும், கழகத்தின் மீதும் ஈடுபாடு கொண்டவர்கள் நம்முடைய திருமங்கலம் கோபால் அவர்களுடைய குடும்பம் என்பது எல்லோரும் நன்றாக அறிவீர்கள்.
கட்சிக்காக உழைத்து, கட்சிக்காகப் பாடுபட்டுத் பணியாற்றி, தொண்டாற்றி, பல தியாகங்களைச் செய்து எப்போதும் ஒரு மிடுக்காகத்தான் இருப்பார். அந்த மிடுக்குதான் இப்போதும் இந்த கழகத்தை வாழவைத்துக் கொண்டிருப்பதை யாரும் தயவுசெய்து மறந்துவிடக் கூடாது.
முதன்முதலில், இளைஞர் அணி என்ற அமைப்பை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு துணை அமைப்பாக உருவாக்க வேண்டுமென்று தலைமைக் கழகம், தலைவர் கலைஞரும், நம்முடைய பேராசிரியர் அவர்கள் முடிவு செய்து, அதற்குப் பிறகு அதைத் துவக்கினார்கள். அது தொடங்கிய காலத்திலிருந்து, தொடர்ந்து நகரப் பகுதிகள், ஒன்றியப் பகுதிகள், கிராமப் பகுதிகள், ஊராட்சி பகுதிகள், பேரூராட்சிப் பகுதிகள், மாநகராட்சிப் பகுதிகள் என நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன்.
சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன் என்றால் அதில் குறைந்தபட்சம் அவர் 30% அவர் என்னோடு பாதுகாப்பாக துணை வந்தவர். அதற்குப் பிறகுதான் 1975-ஆம் ஆண்டு நெருக்கடி கால நேரத்தில் தலைவரோடு நெருங்கிப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. அதிலிருந்து 2005-ஆம் ஆண்டு வரை அவருடைய உயிர் பிரிகிற வரையில், கடைசி வரையில், தலைவருக்குத் துணையாக இருந்து பணியாற்றிய ஒரு தியாகச் செம்மல்தான் நம்முடைய திருமங்கலம் கோபால் அவர்கள் என்பதை இங்கு நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
எப்படி, அண்ணா அவர்கள், கலைஞர் அவர்கள், பேராசிரியர் அவர்கள், நாவலர் அவர்கள், மதியழகன் அவர்கள் போன்றவர்கள் எல்லாம் இளைஞர்களாக இருந்து எப்படி தலைவராகப் பொறுப்பிற்கு வந்தார்களோ, அந்த இளைஞர்களாக இருந்தவர்கள் பொறுப்பிற்கு வந்த காரணத்தினால்தான் இளைஞர்தான் கட்சிக்குத் தேவை என்பதை உணர்ந்த காரணத்தினால்தான் அந்த இளைஞரணியை உருவாக்கினார்கள். அந்த இளைஞரணியை உருவாக்கி எந்த அளவிற்கு கம்பீரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
நான் பல நிகழ்ச்சிகளில் சொல்லியிருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எத்தனையோ அணிகள் இருந்தாலும், இதைச் சொல்கின்ற காரணத்தால் மற்ற அணிகளைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். எல்லா அணியைவிட ஒரு சிறந்த அணி இருக்கிறது என்றால் அது இளைஞரணி என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். அது எதார்த்த நிலை. அதை எல்லோரும் புரிந்துகொண்ட நிலைதான், அதனால் தவறாக நினைக்க வாய்ப்பே கிடையாது. அந்த இளைஞரணி இன்றைக்கு கம்பீரமாகத் தம்பி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும்.
விரைவில், சேலத்தில் மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டிற்காக மாவட்டவாரியாகக் கூட்டங்களை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். செயல்வீரர் கூட்டங்களை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். மாவட்டக் கழக நிர்வாகிகளோடு, கழக முன்னோடிகளோடு ஆலோசனைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். மோட்டார் சைக்கிள் பேரணியை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி, ஒரு எழுச்சியை இன்றைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
எப்படி அன்றைக்கு இளைஞரணி தேவை, இளைஞரணியை பெருமைப்படுத்த வேண்டும், ஊக்கப்படுத்தவேண்டும், உற்சாகப்படுத்தவேண்டும் என்று பேராசிரியர்களும், தலைவர் அவர்களும் விரும்பினார்களோ, அதேபோல் இன்றைக்கு நானும், நம்முடைய பொதுச் செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்களும், டி.ஆர்.பாலு அவர்கள் போன்றவர்கள் எல்லாம் இளைஞரணி வளரவேண்டும் என்று விரும்பிக்கொண்டு இருக்கிறோம். அந்த விருப்பத்திற்கேற்ப அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் பணி இன்னும் சிறப்பாக செயல்படவேண்டும் என்று இந்த நேரத்தில் நம்முடைய திருமங்கலம் கோபால் இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் கேட்டுக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
ஆகவே, அப்படிப்பட்ட வளர்ச்சியைக் கண்டு இன்றைக்கு பொறுத்துக்கொள்ள முடியாமல், ஏதேதோ தவறான பிரச்சாரங்களை, தேவையற்ற பிரச்சாரங்களை, பொய் செய்திகளை, அதுவும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி, மக்களை குழப்பிக் கொண்டிருக்கக்கூடிய அந்த செய்திகளையும் தொடர்ந்து நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். யார் வேண்டுமானாலும் குழப்பட்டும், அண்ணாமலை போன்றவர்கள் குழப்பினாலும் கவலைப்படமாட்டேன். ஆனால், ஒன்றியத்தில் இருக்கக்கூடிய நம்முடைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், நாம் கோயில்களில் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு நம்முடைய சேகர் பாபு அவர்கள் மிக விளக்கமாக, தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார், மேற்கொண்டு நான் அதற்கு விளக்கம் சொல்ல விரும்பவில்லை.
நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன், இதுவரைக்கும் 5500 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் இடங்கள், சொத்துக்கள் மீட்கப்பட்டிருக்கிறது என்றால், அது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான். உள்ளபடியே, அவர்களுக்கு பக்தி என்று ஒன்று இருந்தது என்றால், என்ன செய்யவேண்டும் என்று சொன்னால், திமுக ஆட்சியைப் பாராட்டவேண்டும். அந்த பக்தி இல்லை, பகல் வேஷம். மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் அவர்கள் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை. இந்த நிலையில்தான் இன்றைக்கு நாடு சென்று கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, ஒரு போலீஸ் அதிகாரி, பெயர் சொல்ல விரும்பவில்லை, அவர் தனது official whatsapp-இல் ஒரு செய்தியைப் போட்டு இருக்கிறார். வழக்கு போட்டு இருக்கிறோம். பத்திரிகையில் இன்றைக்கு வரும் நீங்கள் பாருங்கள். எதற்காகச் சொல்கிறேன் என்றால், இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு சிலர் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் வரக்கூடிய தேர்தலில் நீங்கள் எல்லாம் பயன்படுத்தவேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்.
அப்படிப்பட்ட நல்ல வகையில் பயன்படுத்துவதைத்தான் நம்முடைய திருமங்கலம் கோபால் அவர்களும் விரும்பி இந்த இயக்கத்திற்காக பணியாற்றியிருக்கிறார்கள். எனவே, அவருடைய புகழ் வாழ்க! அவருடைய செல்வங்கள் சிறப்புப் பெற்று சிறப்போடு வாழ்க! புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய் வாழுங்கள், வாழுங்கள்” என்று வாழ்த்தி, எல்லாத் திருமண விழாக்களில் சொல்வதுபோல, மணமக்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அழகான தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள், சூட்டுங்கள் என்று கேட்டு, விடைபெறுகிறேன்" என இவ்வாறு அவர் உரையாற்றினார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?