Tamilnadu

தகுதி ஞானம் இல்லையா? - ஆளுநரின் நடவடிக்கைகள் சந்தி சிரிக்கிறது : நீதியரசர் சந்துரு கண்டனம்!

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அலட்சியமாக நடந்து கொண்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு நலத்திட்டங்களும் கிடைக்காமல் போகிறது.

தமிழ்நாட்டில் கூட ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், வேண்டும் என்றே இழுத்தடித்து வருகிறார். இதனால் ஆளுநர் நடவடிக்கையை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களில் 10 மசோதாக்களைத் திருப்பி அனுப்பியுள்ளார். இதையடுத்து நவம்பர் 18ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடி ஒரு வார்த்தைக் கூட மாற்றாமல் 10 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது. பிறகு ஆளுநருக்கு மீண்டும் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையால் சந்தி சிரிக்கிறது என 10 மசோதாக்கள் திருப்பி அனுப்பியதற்கு நீதியரசர் சந்துரு கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நீதியரசர் சந்துரு, "சட்டம் ஒரு இருட்டறை, அதில் வழக்கறிஞர் வாதம் ஒளிவிளக்கு என்றார் அறிஞர் அண்ணா. ஆனால் தமிழகத்தில் இருக்கும் ஆளுநருக்குச் சட்டம் தெரியாதா? கேட்டுத் தெரிந்து கொள்ள ஆட்கள் இல்லையா? அவரது நடவடிக்கையைக் கேட்டுச் சந்தி சிரிக்கிறது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இசைவு தருவதில் அவருக்கு என்ன கஷ்டம். தமிழக அரசு வழக்கு தொடர்ந்த பிறகு, 10 மசோதாவைத் திருப்பி அனுப்பிவிட்டேன் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சட்டங்களை இயற்றும் சட்டமன்றம், நாடாளுமன்றம் இறையாண்மை பெற்ற அமைப்பு. மசோதாவை ஒருமுறை திருப்பி அனுப்பினால், மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் கையெழுத்துப் போடவேண்டும். ஆளுநருக்கு வழக்கறிஞர்கள் இல்லையா? தகுதி, ஞானம் இல்லையா? சட்டம் தெளிவாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி : பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என கருத்து கணிப்பில் தகவல் !