Tamilnadu

“பெருமையா பாராட்டுறீங்க சரி.. ஆனா கீழடி அகழாய்வை கைவிட்டது ஏன்?” - நிர்மலா சீதாராமனுக்கு சு.வெ கேள்வி !

மதுரை தியாகராசர் கல்லூரியில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு, 5 நாட்கள் குடைவரைக் கோயில் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 'தென் தமிழக கோயில்கள்' என்ற தலைப்பி தொல்லியல் துறையின் புகைப்படக் கண்காட்சியை நேற்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், “தமிழ்நாடிலுள்ள பாரம்பரியத்தை மக்களுக்கு சொல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே என்ற மனவேதனை இருந்தது. தமிழகத்தின் பாரம்பரியத்தை நம் முன்னோர்கள் பாறைகளில் அருமையாக வடிவமைத்திருக்கின்றனர். அமைச்சர் வருகிறார் என பாரம்பர்ய இடங்களில் வெள்ளையடித்துவிடுகிறார்கள், வெள்ளையடிக்கப்பட்டதற்குப் பின்னாலுள்ள சரித்திரம், யாருக்கும் தெரிவதில்லை.

தொல்லியல் பாறைகள் சிதிலமடைந்திருப்பது, மனதுக்கு வேதனையாக இருக்கிறது. தமிழ் இலக்கியங்களுக்கும், குடைவரைக் கோயில்களுக்கும் தொடர்புகள் இருக்கின்றன. குடைவரைக் கோயில்களிலுள்ள எழுத்துகளுக்கும் தமிழ் மொழி, ஆன்மிகம், இலக்கியம் ஆகியவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது.

நம்முடைய ஆணிவேரே தமிழ்ப் பாரம்பர்யம்தான். அதை நாம் பாதுகாக்க வேண்டும். மாணவர்கள் டாக்டர், இன்ஜினீயர்கள் என எது வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால், நம்முடைய தமிழ் மரபுகளை அறிந்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.” என்றார். இவரது பேச்சுக்கு தற்போது மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், மதுரையில் ASI பற்றியும், தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் பெருமையோடு பேசியிருக்கிறார். அவருக்கு எனது நன்றி. தமிழ்நாட்டு வரலாற்றின் புதிய திருப்புமுனை கீழடி. ஆனால் இதே ASI கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன் என்பதை கூற முடியுமா?

இதே ASI கீழடி பற்றிய அமர்நாத் இராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கையை இன்று வரை வெளியிடாமல் வைத்திருப்பது ஏன் என்று கூற முடியுமா? இதே ASI இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றை எழுத தீர்மானித்த குழுவில் தமிழ்நாட்டு ஆய்வாளர் ஒருவரை கூட இடம்பெறச்செய்யாதது ஏன் என கூற முடியுமா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.