Tamilnadu
”2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பா.ஜ.கவை விரட்டியடிப்போம்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு!
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தின் சார்பில் தி.மு.க இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் சரளை பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சேலம் மாநாட்டிற்கு உங்களை எல்லாம் அழைப்பதற்காக வந்துள்ளேன். இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு மாநில உரிமைகள் மீட்பு மாநாடு என்ற முழக்கத்தை முன்வைத்து கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணியைத் தொடங்கி வைத்தேன். திருவள்ளூர் மண்டலம், கலைஞர் மண்டலம், அண்ணா மண்டலம், பெரியார் மண்டலம் என 4 மண்டலங்களாகப் பிரித்து பேரணியைத் தொடங்கி வைத்தேன்.
பெரியார் பிறந்த மண் இந்த ஈரோடு. தந்தை பெரியார் மண் என தமிழ்நாட்டைப் பெருமையாகக் கூறுவதற்கான காரணம் இந்த ஈரோடு மண் தான். ஈரோட்டின் பாதையில் தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கலைஞரின் நூற்றாண்டில் இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு நடத்துவது பெருமையாக இருக்கிறது.
நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என நாம் தொடர்ந்து போராடி வருகிறோம். நீட் தேர்வால் இதுவரை 22 பேரை இழந்துள்ளோம். இனி யாரையும் இழக்கக் கூடாது என்பதற்காகத்தான் நீட் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. இதுவரை இணையதளம் மூலம் 17 லட்சமும், தபால்கள் மூலம் 14 லட்சமும் கையெழுத்து பெற்றுள்ளோம். நீட்டிலிருந்து விலக்கு பெரும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம்.
டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் நடக்கும் மாநாடு இந்தியாவிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். திமுக ஆட்சியின் இரண்டரை ஆண்டு சாதனை திட்டங்களை இந்த மாநாடு விளக்கும். தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளும் சரி சொல்லாத வாக்குறுதிகளையும் சரி திராவிடம் மாடல் அரசு செய்துள்ளது .
ஆட்சிப் பொறுப்பேற்றதும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் தான் முதல் கையெழுத்து இட்டார் முதலமைச்சர். இதன் காரணமாக ஒவ்வொரு மகளிரும் மாதம் 12 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கிறார்கள். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களுக்குக் கல்லூரி படிப்பைத் தொடர வழங்கப்பட்டு வருகிறது, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால் 17 லட்சம் பள்ளி குழந்தைகள் பயன்பெறு வருகிறார்கள்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் இந்தியாவிற்கே முன்மாதிரி திட்டமாக உள்ளது. நாம் கொண்டு வந்த இந்த திட்டத்தைப்பார்த்து நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்தியாவை 2019ம் ஆண்டுக்குள் வல்லரசாக மாற்றிக் காட்டுவேன் என கூறினார். ஆனால் இப்போது 2047க்குள் வல்லரசாக மாற்றிக் காட்டுவேன் என கூறுகிறார். பிரதமர் மோடி சொன்ன வாக்குறுதிகள் ஒன்றை மட்டும் நிறைவேற்றியுள்ளார். நான் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவையே மாற்றிக் காட்டுவேன் என கூறினார். இப்போது இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றியுள்ளார். இதுதான் அவர் சாதனை.
2021 தேர்தலில் எப்படி அ.தி.மு.க அடிமைகளை விரட்டி அடித்தோமோ அதே போல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அடிமைகளின் எஜமானர்கள் பாசிச பா.ஜ.கவை விரட்டியடிப்போம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!