Tamilnadu
சிகிச்சைக்கு மட்டுமல்ல உணவிற்கும் கட்டணம் கிடையாது: கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு குவியும் பாராட்டு !
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 3.6.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்காக சென்னை, கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, மருத்துவமனைக்கு கட்டடம் கட்டுவதற்காக முதற்கட்டமாக 230 கோடி ரூபாய் நிதியும், பின்னர் கூடுதலாக 10 கோடியே 54 இலட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பின்னர் தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் மொத்தம் 6 லட்சம் சதுரஅடி பரப்பளவில், 1000 படுக்கைகளுடன் 240.54 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை சிறப்பான முறையில் கட்டி முடிக்கப்பட்டது. அந்த மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.6.2023 அன்று திறந்து வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில், இருதயவியல் துறை, இருதய அறுவை சிகிச்சை துறை, நரம்பியல் துறை, நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, புற்றுநோய் மருத்துவத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை, குடல் இரைப்பை மருத்துவத் துறை, குடல் இரைப்பை அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக மருத்துவத் துறை, இரத்தநாள அறுவை சிகிச்சை துறை, மூளை இரத்தநாள கதிரியல் துறை ஆகிய உயர்சிறப்பு மருத்துவச் சிகிச்சைக்கான வசதிகளை கொண்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் தற்போது வரை ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் சிகிச்சையை தவிர தரமான உணவும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ள அறுவை சிகிச்சை நிபுணர் குரு புருனோ " கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் மதிய உணவு. சிகிச்சைக்கு மட்டுமல்ல உணவிற்கும் கூட கட்டணம் கிடையாது" என்று கூறியுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!