Tamilnadu

10 மசோதாக்களைத் திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு செக் : சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது!

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அலட்சியமாக நடந்து கொண்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு நலத்திட்டங்களும் கிடைக்காமல் போகிறது.

தமிழ்நாட்டில் கூட ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், வேண்டும் என்றே இழுத்தடித்து வருகிறார். இதனால் ஆளுநர் நடவடிக்கையை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சென்னை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா, தமிழ் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா உள்ளிட்ட10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

இதையடுத்து ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றுவதற்காகச் சிறப்புச் சட்டமன்ற கூட்டம் நவ.18ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இதன்படி இன்று சிறப்புச் சட்டமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கூட்டம் தொடங்கிய உடன் மறைந்த தகைசால் தமிழர் சங்கரய்யா மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள்!

1. சென்னை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா.

2. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா.

3. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா.

4. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா.

5. தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா.

6. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா.

7. தமிழ் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா.

8. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா.

9. அண்ணா பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா.

10. தமிழ்நாட்டில் புதிதாகச் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா.

Also Read: எடியூரப்பா மகனை நியமித்தது யார்? : வாரிசு அரசியல் வடை சுட்டுக் கொண்டு இருக்கும் பாஜக கூட்டம் - முரசொலி!