Tamilnadu
”பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது” : அ.தி.மு.க வெளிநடப்புக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்!
ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காகத் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டம் தொடங்கிய உடன் மறைந்த தகைசால் தமிழர் சங்கரய்யா மற்றும் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்குச் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
பின்னர் தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பப்பெற்ற மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் மறு ஆய்வு செய்து நிறைவேற்றிடும் அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதையடுத்து அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார். ரத்து செய்ததாகக் குறிப்பிடவில்லை. மசோதாக்களில் இருக்கும் சட்டச் சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும் "என கூறினார்.
இதற்குப் பதில் அளித்த பேரவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன், "உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது பேரவை நிறைவேற்றிய மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட்டே ஆக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சிறப்புக் கூட்டம்" என கூறினார்.
மேலும் சபாநாயகர் அப்பாவு, "வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பலாமா? மீண்டும் அனுப்பப்படவுள்ள 10 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். 3 ஆண்டுகளுக்குப் பிறகு மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் கூறுவதன் பின்னணியில் உள்நோக்கம் உள்ளது" என எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலளித்தார்.
இதையடுத்து ஜெயலலிதா பெயரிலிருந்த மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றிய சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "மீன்வளப் மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவையும் ஆளுநர் திருப்பி அனுப்பி இருந்தார். ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டு மீண்டும் அவை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைக்கூட புரிந்துகொள்ளாமல் அ.தி.மு.கவினர் உண்மைக்குப் புறம்பான காரணங்களைச் சொல்லி வெளிநடப்பு செய்துள்ளனர்” என விளக்கமளித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய பேரவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன், "பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறினாலும், உள் நீரோட்டம் இருக்கிறது. ஆளுநரை எதிர்த்தால், மோடியை எதிர்த்தது போல என்பதை உணர்ந்து அதிமுகவினர் இன்றைக்கு வெளிநடப்பு செய்துள்ளனர். இதை தான் பூனை குட்டி வெளியே வந்து விட்டது என்று குறிப்பிடுவார்கள்” என பதிலடி கொடுத்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!