Tamilnadu

அத்துமீறும் ஆளுநர்... பல்கலை நிகழ்ச்சி அழைப்பிதழில் உயர்கல்வித்துறை அமைச்சர் பெயர் புறக்கணிப்பு !

பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம், ஆளுநர்களை வைத்து மாநில அரசுகளுக்கு தொல்லை கொடுத்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது, திருப்பி அனுப்பி வைப்பது, பல்கலை விவகாரத்தில் தலையிடுவது உள்ளிட்ட தேவையில்லாத செயல்களில் ஆளுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நடவிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து அவருக்கு ஆதரவாக சில பல்கலை துணை வேந்தர்களும் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பெரியார் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக ஜெகநாதன் நியமிக்கப்பட்டது முதலே பல்வேறு சர்ச்சையான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

விழா காலங்களில் பல்கலைகழக கட்டிடங்களுக்கு காவி நிறத்தில் விளக்குகள் அமைத்தது, பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு உடை அணிந்து வர கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியது, பட்டமளிப்பு விழாவில் தமிழை முற்றிலுமாக புறக்கணித்து, மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை அளிக்காமல் இருந்தது போன்ற பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறியது.

மேலும் பணியாளரை நியமிப்பது, பதவி உயர்வு, தேர்வு போன்றவற்றில் முறைகேடுகள் என பல்வேறு குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றுக்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில், உயர்கல்வித்துறை அமைச்சரின் பெயரை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் 23 ஆம் தேதி G 20 மாநாடு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியானது தமிழ்நாடு அரசு மற்றும் உயர்கல்வி துறை ஒப்புதல் இல்லாமல், அவர்களுக்கு தெரியாமலேயே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவதாகவும், இதனை நிறுத்திட வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழக நிறுவனர் கொளத்தூர் மணி அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த சூழலில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக பல்கலைக்கழக பெயரில் வெளியாகி உள்ள அழைப்புகளில் இணை வேந்தரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் உயர் கல்வித்துறை செயலாளர் பெயர் இடம் பெறாமல் வேண்டுமென்றெ புறக்கணிக்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்த செயல் தற்போது கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ஏற்கனவே மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்ததையடுத்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, ஆளுநர் அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த செயலுக்கு ஒரு புறம் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், நாளை சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டி, ஆளுநர் அனுப்பிய அந்த 10 மசோதாக்களும் எந்த வித மாற்றமும் இன்றி, மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்த சூழலில் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது, மேலும் ஆளுநருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Also Read: அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : 21 பேர் மீது நடவடிக்கை -தமிழக அரசு விளக்கம்