Tamilnadu

அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள்.. அதிரடி ஆக்‌ஷன் எடுத்த தமிழ்நாடு அரசு : ரூ.18 லட்சம் அபராதம் !

தமிழ்நாட்டில் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு பொதுமக்கள் செல்வர். அவ்வாறு பயணிகள் செல்வதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் தனியார் பேருந்துகளும் அதிகமாக இயக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக தனியார் பேருந்துகளில் சாதாரண நாட்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டுதோறும் பொதுமக்களிடம் புகார்கள் குவிந்த வண்ணமாக காணப்பட்டு வருகிறது. இதனால் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டது.

எனினும் சில தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்த முறையும் அதனை தடுக்க பேருந்து கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதாவது தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்னர் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்துத் துறை சார்பாக ஆலோசனை நடத்தியது.

அதில் 5% கட்டணம் குறைக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் 25%, அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் 5% என மொத்தம் 30% கட்டணம் குறைக்க ஆம்னி பேருந்து சங்கம் ஒப்புக்கொண்டது. அதன்படி இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேருந்து பயணிகளுக்கு 30% ஆம்னி பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து அநேக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும் பயணிகளிடம் இருந்து ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் பண்டிகை காலத்தில் பயணம் செய்த பயணிகளிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதாவது, விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

Also Read: மாணவர்களின் படிப்பை தொடர ஏற்பாடுகள் செய்யவேண்டும் - ஒன்றிய, மாநில பாஜக அரசை கண்டித்து மணிப்பூரில் பேரணி !