Tamilnadu

தீபாவளி பண்டிகை : வெடி விபத்துக்கு சிகிச்சை அளிக்க 95 மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு - அமைச்சர் மா.சு!

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர். அதிகாலை முதலே ஆங்காங்கே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் வெடி விபத்து அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தீக்காய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளி தீக்காய சிறப்பு பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,

“தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் வேறு மருத்துவமனையில் பாட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தவிர்த்து, வேறு எங்கும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி.

சென்னையை பொருத்தவரை இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை என எங்கேயும் ஒருவர் கூட பட்டாசு வெடித்து பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் இதுவரை வரவில்லை. தனியார் மருத்துவமனைகளிலும் விவரம் கேட்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் நெமிலிச்சேரி பகுதியில் இருந்து ஒருவரும், ஆவடியில் இருந்து ஒருவர் என 2 பேர் பட்டாசு வெடித்து சிறிய காயங்கள் ஏற்பட்டு இரண்டு சதவீத தீக்காயம் என்ற அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் அறுவை சிகிச்சை செய்து முடித்து சாதாரண படுக்கையில் இருக்கிறார். மற்றொருவர் அறுவை சிகிச்சை வார்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது இரண்டு பேரும் நலமுடன் உள்ளனர். பொதுமக்கள் மிக கவனமுடன் பட்டாசு வெடிக்க வேண்டும். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு முதல்வர் பல்வேறு துறைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார். அதன்படி காவல்துறை, தீயணைப்பு துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டவை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

மக்கள் நல்வாழ்வு துறையும் முதலமைச்சர் வழி காட்டுதல்படி 750 படிக்கைகளுடன் தீக்காய சிகிச்சை வார்டு தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள் என 95 மருத்துவமனைகளில் 750 படுக்கை வசதிகளுடன் சிறப்பு தீக்காய வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் இல்லை. இன்று முழுவதும் விபத்துகள் இல்லா தீபாவளியாக இருக்க வேண்டுமென்று பொது மக்களிடம் வேண்டுகோளாக வைக்கிறேன். பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு செய்ய வேண்டும்.” என்றார்.

Also Read: “இவர்கள் தான் காரணம்..” - ஆசிரமத்தில் தற்கொலை செய்துகொண்ட சகோதரிகள்.. உ.பி-யில் அதிர்ச்சி !