Tamilnadu

அரசு வழங்கிய ஊக்கத்தொகை.. ரூ.25 லட்சத்தை தான் படித்த கல்லூரிகளுக்கு பகிர்ந்தளித்த விஞ்ஞானி வீரமுத்துவேல்!

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை ரூ.386 கோடி செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. குறைந்த செலவில் செய்யப்பட்ட இஸ்ரோவின் இந்த சாதனையை பல்வேறு உலகநாடுகளும் பாராட்டின. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர், ரூ.603 கோடி செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.

அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு கடந்த ஜூலை மாதம் 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டு நிலவுக்கு ஏவப்பட்டு, அதில் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இந்தியாவே பெருமைப்படும் தருணமாக அமைந்த இந்த நிகழ்வுக்கு இயக்குநராக பணியாற்றியவர் ஒரு தமிழர் ஆவார்.

அதுமட்டுமின்றி, நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் திட்டத்தை துவக்கியபோது, அதன் திட்ட இயக்குநராக கோயம்பத்தூரை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை என்பவர் இருந்தார். அப்போது சந்திரயான் 1 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. தொடர்ந்து சந்திரயான்-2 திட்ட இயக்குநராக வனிதா முத்தையா இருந்தபோது திட்டத்தின் இறுதி பகுதி வரை வெற்றிகரமாக இயங்கிய போதிலும் கடைசி கட்டத்தில் யாரும் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது.

இருப்பினும் முயற்சியை விடாமல் 3-வது முறையாக நிலவுக்கு சந்திரயான் 3 அனுப்பபட்டது. சந்திரயான் 3 திட்ட இயக்குநராக விழுப்புரத்தை சேர்ந்த வீர முத்துவேல் இருக்கிறார். இவரும் அரசுப் பள்ளியில் பயின்றவர் ஆவார். தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் 'ஆதித்யா எல்1' திட்டத்தின் இயக்குநராக மீண்டும் அரசுப்பள்ளியில் பயின்ற நிகர்ஷாஜி என்ற தமிழர் இருக்கிறார். இவரும் அரசு பள்ளியில் பயின்றவர் ஆவார்.

இந்த சூழலில் அரசு பள்ளியில் பயின்று இஸ்ரோவில் சாதித்த தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு, கடந்த அக்டோபர் மாதம் “ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்" என்ற தலைப்பில் பாராட்டு விழா நடத்தியது. இதில் கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி.நாராயணன், ஏ.ராஜராஜன், எம்.சங்கரன், ஆசீர் பாக்கியராஜ், டாக்டர் எம்.வனிதா, டாக்டர் நிகார் ஷாஜி, டாக்டர் பழனிவேல் வீரமுத்து ஆகிய 9 பேரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

மேலும் அந்த 9 விஞ்ஞானிகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 7.5% ஒதுக்கீட்டின் கீழ் அரசு கல்வி உதவித்தொகைப் பெற்று இளநிலை பொறியியல் படிப்பினை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பினை தொடரும் 9 மாணவர்களுக்கு சாதனைவிஞ்ஞானிகளின் பெயரில் அமைக்கப்படும் உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் அவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், விஞ்ஞானி வீரமுத்துவேல் தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.25 லட்சம் தொகையை தான் படித்த 4 கல்லூரிகளுக்கு பிரித்து வழ்ங்கியுள்ளார். இவரது செயல் அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதாவது விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக், தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி, திருச்சி என்.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்திற்கு ரூ.25 லட்சத்தை பிரித்து கொடுத்துள்ளார் விஞ்ஞானி வீரமுத்துவேல். இவரது செயல் தற்போது அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Also Read: தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைசட்டம் செல்லும் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!