Tamilnadu
”தொண்டை வலியை விட தொண்டே முக்கியமானது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்!
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான 15.9.2023 அன்று காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்த திட்டத்தில் விண்ணப்பித்துக் கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து மேல்முறையீடு செய்யப்பட்டவர்களின் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டு இறுதியாக 7.35 லட்சம் புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டது.
இவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கி விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தை இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "கடந்த சில நாட்களாகக் காய்ச்சலும், தொண்டை வலியும் எனக்கு இருந்தது. இப்போது காய்ச்சல் குறைந்துவிட்டாலும், தொண்டை வலி மட்டும் இருக்கிறது. என்னுடைய குரலை கேட்கும்போதே உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான், சில நாட்களாக வீட்டிலேயே முழு ஓய்வு எடுத்துக்கொண்டேன். இந்த வாரம் முழுக்க ஓய்வெடுக்கவேண்டும் என்று என்னுடைய மருத்துவர்கள் சொன்னாலும், என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியவில்லை! அதனால்தான், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி மூலமாக இணைந்திருக்கின்ற உங்களை எல்லாம் நான் பார்க்க வந்துவிட்டேன். தொண்டை வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது! அதனால்தான் வந்துவிட்டேன். உங்களை பார்க்கும்போது என்னுடைய உடல் வலி எல்லாம் குறைந்து மனது மகிழ்ச்சியில் நிறைந்துவிட்டது!
இந்த ஆயிரம் ரூபாயை வாங்கும்போது உங்களுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியைவிட, கொடுக்கும்போது, எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சியைவிடச் சிறந்த மருந்து ஏதுவாக இருக்க முடியும்? அதனால்தான், மருத்துவர்கள் அறிவுரையையும் மீறி இந்த விழாவுக்கு வந்துவிட்டேன்.
குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பாகவே சொன்னோம். அப்போது சிலர் என்ன சொன்னார்கள், என்ன சொன்னார்கள் என்றால், “இதையெல்லாம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி”, “இவர்கள் ஆட்சிக்கு வரவே மாட்டார்கள்” இதுமாதிரி ஒவ்வொருவரும் நிறைய சொன்னார்கள். கட்டம் எல்லாம் பார்த்தார்கள். ஆனால், நீங்கள் எல்லோரும் என்ன சொன்னீர்கள்? “தி.மு.க.தான் ஆட்சிக்கு வரவேண்டும்” “தி.மு.க. சொன்னால், சொன்னதை நிறைவேற்றும்.
கலைஞர் மகன் ஸ்டாலின் தான் முதலமைச்சராக வரவேண்டும்” என்று ஓட்டு போட்டு பதிலடி தந்தீர்கள். உங்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டவன் நான்! இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னால், சொன்னதை நிச்சயம் செய்வேன்! அதற்கு அடையாளமாகதான், மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்குகிறோம். அதனால்தான் உங்கள் முன்னால் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!