Tamilnadu
நாத்திகரின் கருத்துரிமையை பாதுகாப்பதும் நீதிமன்றத்தின் கடமைதான் - சனாதன வழக்கில் உதயநிதி சார்பில் வாதம் !
கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 'சனாதன ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது. இந்த மாநாட்டில் சனாதன ஒழிப்பில் ஒத்த கருத்துகளையுடைய அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முன்னணி எழுத்தாளர்கள், கருத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்
அப்போது இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்தும், அது மக்களை எவ்வளவு அடிமையாக்குகிறது என்பது குறித்து பேசினார். மேலும் 'சனாதனம் என்பது டெங்கு, மலேரியா, கொரோனா போன்றது. எனவே அதனை எதிர்க்க கூடாது; ஒழிக்கணும்' என்றும் பேசினார். அதுமட்டுமின்றி சனாதனம் என்ற பெயரில் இன்னமும் மக்களை அடிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இவரது பேச்சு பாஜக, ஆர்.எஸ்.எஸ். இந்துத்வ கும்பலுக்கு பெரும் கடுப்பை கிளப்பவே, உதயநிதி பேசியதை திரித்து அவர் இனப்படுகொலை பற்றி பேசியதாக போய் பிரச்சாரத்தை மேற்கொண்டது. பாஜகவின் உண்மை முகத்தை தோலுரிக்கும் விதமாக பாஜக கும்பலுக்கு இந்திய அளவில் இருந்து பாஜகவுக்கு எதிர்ப்பும், உதயநிதிக்கு ஆதரவும் குவிந்தது.
மேலும் இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, ஆ.ராசா உள்ளிட்டோர் மீது இந்து முன்னணி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். அந்த வாதம் பின்வருமாறு :
அமைச்சர் பதவி பிரமாண உறுதிமொழியை மீறி விட்டனர் என்று கூறி உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது. ஒருவரை அமைச்சராக நியமிப்பதும், நீக்குவதும் முதலமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினாலும், அதை எதிர்த்து தனி நபர்கள் வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 25, மத நம்பிக்கையை மட்டும் பாதுகாக்கவில்லை, நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது. ஏன் நாத்திகத்தை ஏற்கிறோம் என்பது குறித்து கருத்து தெரிவிக்கவும் உரிமை வழங்குகிறது.
இதன் காரணமாக சனாதனத்துக்கு எதிராக பேசியதாக இந்த வழக்கை தொடர முடியாது. பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் அதேவேளையில், மாற்றுக் கருத்து உள்ளவர்களின் கருத்துரிமையையும் பாதுகாப்பது முக்கியம். அந்த கருத்துரிமையை பாதுகாப்பது உயர்நீதிமன்றத்தின் கடமை.
சனாதனத்தில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு, தீண்டாமை உள்ளது. அவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளார். திருமணத்துக்கு முன்பு உறவு குறித்து நடிகை குஷ்பூ தெரிவித்த கருத்துகளுக்காக அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இதை எதிர்த்து குஷ்பூ தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர் தெரிவித்த கருத்து பிடிக்கவில்லை என்றால், அவரது கருத்து தவறு என்று பொதுவெளியில் பேசலாமே, அதற்காக குற்றவழக்கு ஏன் தொடர வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
பேச்சுரிமை என்பது ஒருவரின் அடிப்படைய மனித உரிமை. ஒருவரது பேச்சுரிமை கட்டுப்படுத்த அரசியல் அமைப்புச்சட்டத்தில் 8 காரணங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த 8 காரணங்களில், மனுதாரர் இந்த வழக்கில் கூறியுள்ள காரணம் இடம்பெறவில்லை. தேவை இல்லாமல் இந்த வழக்கை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்தது மட்டுமல்லாமல், அமைச்சரையும் பதில் மனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர்.
மாதொருபாகன் என்ற புத்தகத்தை எழுதிய பெருமாள் முருகன் வழக்கில், ஒருவரது கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும். அந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றால், அந்த புத்தகத்தை வாங்க வேண்டாம். படிக்க வேண்டாம், ஒருவரது பேச்சு பிடிக்கவில்லை என்பதற்காக அவரது கருத்துரிமையை தடுக்கமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சனாதன ஒழிப்பு மாநாடு ஒரு கூட்டரங்கில் காலை முதல் இரவு வரை நடந்துள்ளது. ஏராளமான அறிஞர்கள் பேசியுள்ளனர். அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால் அதை ஏன் கேட்க வேண்டும்? இது போன்ற காரணங்களுக்காக இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!