Tamilnadu

ஆளுநருக்கு எதிராக 198 பக்க மனு. ’காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும்’ : உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு!

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில்கூட ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது, ஒரு ஆளுநராக இருந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் தனது சனாதன கருத்துகளைப் பேசி வருகிறார். மேலும் பா.ஜ.க தலைவர்போல் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை ஆளுநர் விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்துள்ள மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் இழுத்தடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள், மக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் சூழலிலும், ஆளுநர் தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறார். இதனால் ஆளுநரின் இந்த செயலுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், அரசு நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக குற்றம் சாட்டி தமிழ்நாடு அரசு, கடந்த 31-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக 198 பக்க மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு வரும் நவம்பர் 10-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி, காலவறையின்றி நிலுவையில் வைத்துள்ளதாகவும், இந்த வழக்கினை நவம்பர் 10-ம் தேதியே விசரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை பரிசீலிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், அரசு நியமித்த தேர்வுக்குழுகளின் பரிந்துரைகளின்படி பல்கலை., துணைவேந்தரகளை நியமிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

Also Read: மலையகத் தமிழர் விழா : முதலமைச்சர் காணொலி உரைக்கு தடை விதித்த ஒன்றிய அரசு.. வைகோ கடும் கண்டனம் !