Tamilnadu

டாக்டர் பட்டம் விவகாரம் : “டாக்டர் பட்டத்தைவிட ‘சங்கரய்யா’ என்ற பெயர்ச்சொல் மேலானது”- வைரமுத்து !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான ஆளுமை நிறைந்த தலைவர்களுள் ஒருவர்தான் என்.சங்கரய்யா. இவர் தனது இளம் வயதிலேயே தனது படிப்பை பாதியில் துறந்து சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர், இதற்காக சுமார் 8 ஆண்டுகள் தனது வாழ்வை சிறையில் கழித்தார்.

ஏழை, எளிய மக்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த இவருக்கு, கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு 'தகைசால் தமிழர்' விருது கொடுத்து கெளரவித்தது. தற்போது 100 வயதை கடந்திருக்கும் இவரது ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக கெளரவ முனைவர் பட்டம் வழங்க கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தீர்மானம் நிறைவேற்றியது.

ஆனால் சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்க அனுமதி கோரும் கோப்பு பல்கலைக்கழகத்தால் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவர் அதில் கையொப்பமிட மறுத்துள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நேற்று காமராஜ் பல்கலை.யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தார்.

அதன்படி நேற்று நடைபெற்றஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கிய பட்டமளிப்பு விழாவை தமிழ்நாடு புறக்கணித்ததோடு, பட்டம் வாங்க கூடிய 2 பேராசிரியர்களும் புறக்கணித்தனர். தொடர்ந்து ஆளுநர் ரவிக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது இந்த விவகாரம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“டாக்டர் பட்டத்தைவிட

சங்கரய்யா என்ற

பெயர்ச்சொல் மேலானது

இந்தத்

தப்புத் தாமதத்திற்குப் பிறகு

ஒப்புதல் தந்தாலும்

பெரியவர் சங்கரய்யா

அதை இடக்கையால்

புறக்கணிக்க வேண்டும்

பெயருக்கு முன்னால்

அணிந்து கொள்ள முடியாத

மதிப்புறு முனைவர்

பட்டத்தைவிடத்

தீயைத் தாண்டி வந்தவரின்

தியாகம் பெரிது

கொள்கை பேசிப் பேசிச்

சிவந்த வாய் அவருடையது

இனி இந்த

வாடிப்போன வெற்றிலையாலா

வாய்சிவக்கப் போகிறது?” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: "பாஜக ஆட்சிக்கான கவுண்டவுன் சங்கை வேலையில்லா இளைஞர்கள் ஊதுவார்கள்" : மல்லிகார்ஜூன கார்கே தாக்கு!