Tamilnadu

”ஏழைகளின் வாழ்க்கையில் விளக்கேற்றிய ஒளிவிளக்கு TVS - 50” : நெகிழ்ச்சியுடன் பேசிய முதலமைச்சர் !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (28.10.2023) சென்னையில் நடைபெற்ற டிவிஎஸ் குழுமத்தின் மதிப்பிற்குரிய டி.எஸ். சீனிவாசன் அவர்களின் நூற்றாண்டு விழாவில் ஆற்றிய உரை:-

TVS என்ற மூன்றெழுத்து நிறுவனத்தை DMK என்ற மூன்றெழுத்தின் தலைவராக வாழ்த்துவதற்காக நான் வந்திருக்கிறேன்! எனது தந்தை என்பதைவிட நான் தலைவராக போற்றக்கூடிய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் இதுதான் நூற்றாண்டு. வேணு சீனிவாசன் அவர்களுடைய தந்தை - டி.வி.எஸ். குழுமங்களின் முக்கியத் தூணாக விளங்கிய மரியாதைக்குரிய சீனிவாசன் அவர்களுக்கும் இதுதான் நூற்றாண்டு. தமிழ்நாட்டின் தொழில்துறை அடையாளங்களில் TVS முக்கியமானது என்பதை யாரும் மறக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது.

TVS நிறுவனத்தை பற்றி நான் உங்களுக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டினுடைய தொழில் முகத்தை காட்ட வேண்டும் என்றால் அதற்கு ஒரு முகமாக – டி.வி.எஸ். நிறுவனத்தைக் காட்டலாம். இதற்கு அடித்தளம் அமைத்தவர் தொழில் மேதைகளில் ஒருவரான டி.வி.சுந்தரம் அவர்கள்.

இன்றைக்கு லட்சக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் எத்தனை வந்தாலும் ஏழைகளுக்கான வாகனமாக இருந்தது TVS - 50 வாகனம் தான். ஏழை - எளிய சிறு வியாபாரிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றிய ஒளிவிளக்கு அந்த வாகனம். தென் மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களுக்குள் முதலில் சென்ற வாகனம் TVS தான். இதை உருவாக்கியவர் திருக்குறுங்குடி வெங்கராம் சுந்தரம் அவர்கள். டி.வி.சுந்தரம் குரூப்ஸ் நிறுவனங்களை உருவாக்கிய தொழில்துறை மேதை அவர். வழக்கறிஞராக இருந்து தொழிலதிபர் ஆனவர் அவர். அந்தக் காலத்தில் திருவல்லிக்கேணி இலக்கியச் சங்கம் என்பது மிகப்பெரிய அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் சொற்பொழிவாற்றும் இடமாக இருந்தது. இப்போதும் இந்த அமைப்பு நூலகத்துடன் இயங்கி கொண்டு வருகிறது.

அந்த திருவல்லிக்கேணி இலக்கியச் சங்கத்தில் உரையாற்ற வந்த வழக்கறிஞர் நார்டன் அவர்களது உரையைக் கேட்டு தொழில் துறையில் இறங்கினார் டி.வி.சுந்தரம் அவர்கள். 1912-ஆம் ஆண்டு மதுரையை மையமாக கொண்டு பேருந்து சேவையை தொடங்கினார். தஞ்சாவூர் - புதுக்கோட்டை தான் அவர் முதன்முதலாக பேருந்து இயக்கிய வழித்தடம். அந்தக் காலத்தில் சரியான சாலை வசதிகள் இல்லை. அதனால் சாலைகள் போடுகிற ஒப்பந்தத்தையும் எடுத்தார். சாலைகளில் இரும்பு ஆணிகள், மாட்டு லாடம் அதிகம் கிடக்கும். இதனால் பேருந்து டயர் பஞ்சர் ஆகும். எனவே இதை முன்கூட்டியே எடுக்க காந்த வாகனத்தையும் வைத்திருந்தார்.

இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு வந்தது. உடனே கரிவாயு மூலம் வாகனத்தை இயக்குகிற பங்க் வைத்தார். பேருந்து இயக்குவது - பாகங்களை தயாரிப்பது - வாகனங்களை உருவாக்குவது போன்ற கிளைத் தொழில்கள் எல்லாவற்றையும் தொடங்கியதால்தான், இன்றைக்கு 80 நாடுகளில் டி.வி.எஸ் நிறுவனம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

இத்தகைய மாபெரும் மனிதர், தன்னுடைய வாரிசுகள் எல்லோரையும் தொழில் துறையில் ஈடுபடுத்தி வளர்த்திருக்கிறார். தாத்தா - மகன் - பேரன் – கொள்ளுப்பேரன் என்று டி.வி.எஸ்-ன்ற மூன்றெழுத்தை காப்பாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

டி.வி.சுந்தரம் அவர்களை போலவே அவருடைய மகன் சீனிவாசனும் இந்த தொழிலில் புதுமைகளை புகுத்தி விரிவுபடுத்தினார். சீனிவாசன் அவர்களின் மகன் வேணு சீனிவாசன் அவர்களும் இதை இன்னும் சிறப்பாக செய்துகொண்டு வருகிறார்.

வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம். அதற்கு அடையாளமாக டி.வி.எஸ் நிறுவனம் உயர்ந்து நிற்கிறது. வாரிசு என்று சொல்வதால் ஏதோ அரசியல் பேசுவதாக யாரும் நினைக்கத் தேவையில்லை. வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சிறப்பாக செய்து வெற்றிக்கொடி நாட்டலாம் என்றுதான் சொன்னேன்.

இன்றைக்கு நாம் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வரக் கூடிய சீனிவாசன் அவர்கள், இந்த டி.வி.எஸ் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றதில் முக்கியப் பங்காற்றியவர். தொழிலதிபர்களில் பலவகை உண்டு. சிலருக்கு நிர்வாகத் திறன் இருக்கும். சிலருக்கு தொழில் நுட்ப அறிவு அதிகமாக இருக்கும். சிலர் நேர காலம் பார்க்காமல் உழைப்பார்கள். சிலர் புதுமைகளை புகுத்துவார்கள். சிலர் தொழிலாளர்களே முக்கியம் என்று நினைப்பார்கள். இவை அனைத்தையும் ஒரு சேரப் பெற்றவராக டி.எஸ்.சீனிவாசன் அவர்கள் இருந்தார். இதுதான் அவருடைய சிறப்பு. வெற்றிக்கும் காரணம்.

தனது தந்தை நிர்மாணித்துக் கொடுத்த தொழிலை அப்படியே காப்பாற்றுபவராக மட்டும் இல்லாமல் - அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செலுத்துபவராவும் டி.எஸ்.சீனிவாசன் அவர்கள் இருந்தார். அப்பாவினுடைய நிறுவனமாக இருந்தாலும் அவர் இதில் முதன்முதலாக சர்வீஸ் மேனேஜர் என்ற பொறுப்பில்தான் சேர்ந்தார். வாழ்க்கையின் இறுதி வரைக்கும் சர்வீஸ் முதலாளியாக செயல்பட்டிருக்கிறார் டி.எஸ். சீனிவாசன் அவர்கள்.

ஒரு இயந்திரத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்கான கையேட்டை அவர் தயாரித்தாகவும் – அதை ஒருவர் படித்தாலே சிறந்த தொழிலதிபர் ஆகிடலாம் என்றும் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் - எல்லோரும் தங்களுக்குத் தெரிந்த தொழில் ரகசியத்தை வெளியில் சொல்லி விடமாட்டார்கள். ஆனால், எல்லோருக்கும் கற்பிக்கக் கூடியவராக டி.எஸ்.சீனிவாசன் அவர்கள் இருந்திருக்கார்.

சேவைத் துறை நிறுவனமாக இருந்த டி.வி.எஸ். நிறுவனத்தை உற்பத்தித் துறை நிறுவனமாக மாற்றியதில் பெரும்பங்கு டி.எஸ்.சீனிவாசன் அவர்களை சேரும். சென்னை பாடி பகுதியில், 300 ஏக்கர் நிலத்தை வாங்கியபோது, இவ்வளவு பெரிய நிலம் எதற்கு என்று அப்போது சிலர் தடுத்திருக்கிறார்கள். ஆனால், 25 ஆண்டுகள் கழித்து தேவைப்படும் என்று தொலைநோக்குப் பார்வையோடு சொல்லி இருக்கிறார் டி.எஸ்.சீனிவாசன் அவர்கள்.

சைக்கிள் போல ஒவ்வொரு வீட்டிலும் மொபெட் இருக்க வேண்டும் என்று சொல்லி – அதை சாதித்துக் காட்டியவர் அவர்தான். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயும் ஓசூர் தொழிற்சாலையை உருவாக்க கடுமையாக உழைத்தார். துணிச்சலாக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்.

தொழிலாளர்களோடு தொழிலாளராக இருந்திருக்கார். அவர்களின் நலனில் அக்கறை கொண்டவராக இருந்திருக்கார். இந்த சிந்தனை என்பது மரியாதைக்குரிய டி.வி.சுந்தரம் அவர்கள் மூலமாக வந்த சிந்தனை. காந்தியவாதியாக வாழ்ந்தவர் டி.வி.சுந்தரம் அவர்கள். முற்போக்கு எண்ணம் கொண்டவராக இருந்தார். இளம் வயதில் கணவரை இழந்த தன்னுடைய மகளுக்கு அந்தக் காலத்திலேயே மறுமணம் செய்து வைத்தார். தலைசிறந்த மருத்துவராக - சட்டமன்ற உறுப்பினராக - பிரதமர் நேரு அவர்களின் அமைச்சரவையில் ஒன்றிய துணை அமைச்சராவும் - தி.சு.சௌந்திரம் அவர்கள் உயர்ந்தார்.

இப்போதும் சிலர் குழந்தை திருமணத்தை பச்சையாக ஆதரித்தும் - மறுமணம் செய்வதாக இருந்தால் அதற்கு மந்திரம் கிடையாது என்றும் சொல்கிற காலத்திலே - 60 ஆண்டுகளுக்கு முன்னரே முற்போக்காக சிந்தித்தவர் டி.வி.சுந்தரம் அவர்கள்.

இங்கே ஒரு புத்தகம் டி.வி.எஸ் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கிறது. டி.வி.எஸ் செய்த சாதனைகளில் இதுவரை வெளியில் தெரியாத ஒரு சாதனை இது. தொழில் உற்பத்தி மற்றும் பெருக்கத்தின் வழி, வருமானத்தையும் வளர்ச்சியையும் மட்டும் பெருக்காமல், ஒரு படி மேல போய், பல்லுயிரின் இருப்புக்கும் பெருக்கத்துக்குமே தொழில்துறை பயன்பட முடியும் என்று TVS நிறுவனம் காட்டியிருக்கிறது. அதுதான் இந்த புத்தகம்.

தமிழ்நாட்டின் தொழில்நகரமான ஓசூரில் TVS இந்த உதாரணத்தை தொடங்கியிருக்கிறது. அங்கே நிறுவனம் இயங்கத் தொடங்கிய 1976-கால கட்டத்தில் ஒரு குளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். பறவைகள் வந்திருக்கிறது. நீர்நிலைகளில் மட்டுமே வசிக்கிற Painted Stork எனப்படும் நாரைகளும் வரத் தொடங்கி இருக்கிறது. தொழிலைப் பெருக்க வந்தவர்கள், பல்லுயிர் பெருக மரங்களை நட்டிருக்கிறார்கள். இருபது ஆண்டுகளில் ஓசூரில் ஒரு காட்டையே TVS உருவாக்கியிருக்கிறார்கள். அதை The Painted Stork என்கிற இந்த புத்தகத்தில் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

SST அறக்கட்டளை மூலமாக 2500-க்கும் மேற்பட்ட கிராமங்களை தத்தெடுத்து அந்தக் கிராமங்களை மேம்படுத்தி கொண்டு வருகிறார் வேணு சீனிவாசன் அவர்கள்.

*பெண்கள் - குழந்தைகள் வளர்ச்சி

*நீர் பாதுகாப்பு

*வேளாண்மை

*கால்நடை வளர்ச்சி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பணிகளை நீங்கள் செய்து கொண்டு வருகிறீர்கள்.

இதே போன்ற அறக்கட்டளைகளை நிறுவி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கிராமப்புற மேம்பாட்டுக்கு பங்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

'நம்ம ஊர் பள்ளி' என்கிற மகத்தான திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். சமூக சேவை எண்ணம் கொண்டவர்களுடைய முயற்சியையும் இணைத்துக் கொண்டு அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இதன் மூலமாக, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். நம்முடைய வேணு சீனிவாசன் அவர்களும், செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாத் ஆனந்த் அவர்களும் இந்த தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். திட்டத்தை நான் தொடங்கிய முதல் நாளே ஐம்பது கோடி ரூபாய் மதிப்பிலும், இப்போது 158 கோடி ரூபாய் மதிப்பிலும் கொடைகள் வந்திருக்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வெளியில் இருந்து கிடைத்த முதல் பாராட்டு திரு. வேணு சீனிவாசன் அவர்களுடைய பாராட்டு தான். அதை அவர் மறந்திருந்தாலும் நான் மறக்கவில்லை.

இயற்கைப் பேரிடர் காலங்களில் உதவி செய்கின்ற நிறுவனமாக டி.வி.எஸ். இயங்கி வருகிறது. கொரோனா காலத்திலும் நிறைய உதவிகள் செய்திருக்கிறீர்கள். சீனிவாசன் சர்வீஸ் டிரஸ்ட் என்ற பொருத்தமான பெயரை வைத்திருக்கிறீர்கள். அவரே சர்வீஸின் அடையாளமாக இருக்கிறார்.

டி.எஸ். சீனிவாசன் அவர்களுடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் அவரது தொழில் முயற்சிகளை - அவரது சமூக நோக்கங்களை அப்படியே பின்பற்றி வரும் அருமை நண்பர் வேணு சீனிவாசன் அவர்களை மனதார பாராட்டுகிறேன். நூற்றாண்டு விழா நாயகர் சீனிவாசன் புகழ் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

இன்றைக்கு தமிழ்நாடு அனைத்துத் துறையிலும் முன்னேறி வருகிறது. அதிலும் குறிப்பாக, தொழில் துறையில் அதிவேக முன்னேற்றத்தை கண்டு வருகிறது. ஏராளமான புதிய புதிய தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். தமிழ்நாடு அமைதிமிகு மாநிலமாக இருப்பதுதான் இதற்குக் காரணம். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஏறத்தாழ 10 விழுக்காடு அளவுக்குத் தமிழ்நாட்டின் பங்களிப்பு இருக்கிறது.

2024 ஜனவரி மாதம் நாங்கள் நடத்த இருக்கிற உலக முதலீட்டாளர்கள் மாநாடு இதுவரை இப்படி எங்கேயும் நடந்ததில்லை என்று புகழப்படுகிற அளவிற்கு நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம். டி.வி.எஸ். போன்ற நிறுவனங்கள் இதில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

தொழில் துறையைப் பொறுத்தவரை, அரசுத் துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்பட்டு வளர்ச்சியை அடைய வேண்டும். டி.வி.எஸ் போன்ற புதிய புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும். நூற்றாண்டு விழா நாயகர் சீனிவாசனைப் போன்ற தொழில் மேதைகள் உருவாக வேண்டும். வேணு சீனிவாசன் போன்ற தொழில் முனைவோர்கள் தமிழ்நாட்டுக்குத் தேவை. அதற்கு இது போன்ற விழாக்கள் ஊக்கமளிப்பதாக அமையும் என்பதைச் சொல்லி இந்த அளவில் நான் விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவருக்கு மணி மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!