Tamilnadu
மார்பக புற்றுநோய் 2D, 3D MAMMOGRAM பரிசோதனை : அரசு மருத்துவமனைகளில் இலவசம் - அமைச்சர் மா.சு பேட்டி !
சென்னை மந்தைவெளி பகுதியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காவேரி தனியார் மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, திமுக விளையாட்டு அணி துணைச் செயலாளர் நிவேதா ஜெசிக்கா மற்றும் காவேரி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மகேஷ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “உலக சுகாதார அமைப்பின் சார்பில் கடந்த 37 ஆண்டுகளாக ஒவ்வொரு அக்டோபர் மாதமும் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பைக் வாக்கத்தான் என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மிக அவசியமான ஒன்றாக உள்ளது. 1 லட்சம் மகளிருக்கு 25.8 பேர் மார்பக புற்றுநோய் பாதிக்கப்படுகிறது. 1 லட்சம் பேரில் 12.7 பேர் இதனால் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. மார்பக புற்றுநோய் கண்டறியும் 2D மேமோகிராம் கருவி தமிழகத்தில் 43 இடங்களில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இருப்பது போல நவீன 3D மேமோகிராம் கருவிகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ளது.
இதற்காக 2500 ரூபாய் தொகையில் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் முழுவதும் இலவசமாக பரிசோதனை செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், ஆண்களுக்கான புகையிலை மூலம் வாய்ப்புற்றுநோய் என எதுவாக இருந்தாலும், ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் உயிர்காக்க முடியும் என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.
மருத்துவ இடங்களில் 15% அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாகவும், 85% மாநில ஒதுக்கீட்டு இடங்களாகவும் உள்ளது. இதில் கடந்த ஆண்டு, அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 6 இடங்கள் காலியாக இருந்தது. இந்தாண்டு 83 இடங்கள் காலியாக உள்ளது. இதனால், கடந்த வாரம் தேசிய மருத்துவ ஆணையத்திற்கும், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. அதனால், முதலமைச்சர் அறிவுறுத்தல் படி ஏற்கனவே தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களை தமிழ்நாடு அரசே நிரப்பிக் கொள்ள அனுமதிக்கும் படி நாளையோ அல்லது நாளை மறுதினமோ சட்டரீதியாக உச்சநீதிமன்றத்திங் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
டெங்கு பாதிப்பு தமிழகத்தில் கட்டுக்குள் தான் உள்ளது. 5200 பேர் இந்தாண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2012 மற்றும் 2017-ம் ஆண்டு தான் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது கட்டுக்குள் உள்ளது. தேவையான தடுப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியிலும் கொசு மருந்து தெளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களும் தங்கள் வசிக்கும் இடங்களை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!