Tamilnadu
பங்காரு அடிகளார் உடல் : துப்பாக்கி குண்டுகள் முழங்க தமிழ்நாடு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் !
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயிலின் குருவாக செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார் (82). இங்கு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய இவர், அதன் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் தொடங்க காரணமாக இருந்தவர் ஆவார்.
அந்த கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் செயல்பட்ட இவர், கல்வி சேவை, ஆன்மீக சேவை என்று அனைத்திலும் புதுமையாக திகழ்ந்தார். இவரது ஆன்மீக சேவையை பாராட்டி, 2019-ம் ஆண்டு ஒன்றிய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் கருவறையில் பெண்கள் வழிபாடு செய்யும் முறையை மட்டுமின்றி, மாதவிடாய் நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையையும் கொண்டு வந்து, ஆன்மீகத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்து காட்டினார். இதனாலே இந்த கோயிலுக்கு நாள்தோறும் பெண் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று இரவு தனது 82-வது வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பக்தர்கள், தலைவர்கள் என பலரும் இரங்கல்களும் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். இவரது உடலை இறுதியாக காண பக்தர்கள் குவிந்துள்ளனர்.
அதன்படி இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனிடையே நேற்று பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், இன்று இவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு அரசு சார்பில் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது இறுதி நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு சார்பில், அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலரும் இருந்தனர். தொடர்ந்து பங்காரு அடிகளாரின் உடல், நல்லடக்கம் செய்யப்படும் இடத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவு தாங்க முடியாத ஒன்று என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?