Tamilnadu

பழங்குடி மாணவிக்கு பாலியல் தொல்லை : அதிமுக பிரமுகருக்கு குட்டு வைத்த நீதிமன்றம் - ஜாமீன் மனு தள்ளுபடி !

கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் அமைந்துள்ள இரயில் நிலையம் அருகே தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் அந்த பகுதி மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கே விடுதி வசதி இருப்பதால் சில மாணவிகள் விடுதியில் தங்கியும் படித்து வருகின்றனர்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த பழங்குடியின மாணவி ஒருவர் கடந்த 2021-ம் ஆண்டு இந்த கல்லூரியில் சேர்ந்தார். குடும்பத்தின் முதல் பட்டதாரியாக ஆக வேண்டும் என்ற கனவோடு வந்த இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் அந்த கல்லூரி நிறுவனரின் சகோதரரும், அதிமுக பிரமுகரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான செந்தில்குமார்.

ஆரம்பத்தில் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்த செந்தில் குமார், நாளாக ஆக தொல்லையை அதிகரித்துள்ளார். அவரை காணும்போதெல்லாம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது இந்த செயலால் பயந்துபோன மாணவியும், படிப்பு கெட்டு விடும் என்ற பயத்தில் வெளியே சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனை தனக்கு சாதமாக பயன்படுத்தி வந்துள்ளார் செந்தில் குமார்.

ஒரு கட்டத்தில் இது மிகவும் எல்லை மீறவே, செந்தில் குமார் அந்த மாணவியை விடுதியில் இருந்து கட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவரது இந்த செயலுக்கு மாணவியின் விடுதி காப்பாளர் அமுதவள்ளியும் உடந்தையாக இருந்துள்ளார். செந்தில் குமார் பிடியில் இருந்து தப்பித்த பாதிக்கப்பட்ட மாணவி, 2022-ம் ஆண்டு போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அதிமுக பிரமுகர் செந்தில் குமாரையும், அவருக்கு உடந்தையாக இருந்த அமுதவள்ளியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இருவரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் மனு தள்ளுபடியானது.

இதைத்தொடர்ந்து மீண்டும் மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தார். மேலும் அவர்களின் செயல் கண்டிக்கத்தக்கது என்று கண்டனமும் தெரிவித்தார்.

அதாவது, செந்தில்குமார் பிரபல அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கின் சாட்சிகளை எளிதாக கலைக்கக்கூடும் என்றும், மாணவியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், இப்போதே மாணவியின் குடும்பத்துக்கு பல மிரட்டல்கள் வருவதாகவும், எனவே குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனது குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆசையில் நர்சிங் படித்த பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், பெண் கல்வி நிறுவனங்கள், அங்கு படிக்க வரும் மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பை தருவது அவர்களின் கடமை என்றும் தெரிவித்தார்.

மேலும் மனுதார்கள் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவையாக இருப்பதால், செந்தில் குமார், அமுதவள்ளி ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உத்தரவிடுவதாக கூறிய நீதிபதி, அவர்கள் மீதான வழக்கு விசாரணை முடியும் வரை சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கை கரூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Also Read: "மோடி ஆட்சியில் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் அச்சுறுத்தப்படுகிறது" : இந்து என்.ராம் ஆவேசம்!