Tamilnadu

“முற்போக்கு தளத்தில் ஆன்மிகத்தை நிறுத்தியவர்..” - பங்காரு அடிகளார் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி இரங்கல்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயிலின் குருவாக செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார் (82). இங்கு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய இவர், அதன் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் தொடங்க காரணமாக இருந்தவர் ஆவார்.

அந்த கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் செயல்பட்ட இவர், கல்வி சேவை, ஆன்மீக சேவை என்று அனைத்திலும் புதுமையாக திகழ்ந்தார். இவரது ஆன்மீக சேவையை பாராட்டி, 2019-ம் ஆண்டு ஒன்றிய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் கருவறையில் பெண்கள் வழிபாடு செய்யும் முறையை மட்டுமின்றி, மாதவிடாய் நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையையும் கொண்டு வந்து, ஆன்மீகத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்து காட்டினார். இதனாலே இந்த கோயிலுக்கு நாள்தோறும் பெண் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த இவர், இன்று தனது 82-வது வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்களும் அஞ்சலியும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு பின்வருமாறு :

"மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தினோம். கலைஞர் அவர்கள் மீதும் - கழகத்தலைவர் அவர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்.

மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்கு தளத்தில் ஆன்மிகத்தை நிறுத்திய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அடிகளாரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அவரை பின்பற்றும் லட்சோப லட்ச பொதுமக்கள் அனைவருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்."

Also Read: மாரடைப்பால் காலமானார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் : பக்தர்கள் அதிர்ச்சி !