Tamilnadu

”இந்திய கடல்சார் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு” : அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்!

உலகளாவிய கடல்சார் இந்திய உச்சிமாநாடு-2023 மும்பையில் அக்டோபர் 17 முதல் 19 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் முதல் நாளான நேற்று கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் சிறு துறைமுகங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் பங்குப் பெற்றனர். இதில் தமிழ்நாட்டின் சார்பாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும், தனித்தனி அமர்வுகள் ஏற்படுத்தி, அந்தந்த மாநிலங்களில் முதலீட்டு வாய்ப்புகள், மாநிலத்திற்கான வளர்ச்சித் திட்டம், இணைப்பு நெட்வொர்க்குகள், முற்போக்கான உள்கட்டமைப்பு மற்றும் எளிதான வியாபாரம் போன்றவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டிற்கான தனி அமர்வில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "இன்றைய உலக நடப்பில், அனைத்து நாடுகளின் வர்த்தகமும் நீர்வழிகளையே நம்பியுள்ளது. சுமார் 80% சர்வதேச சரக்குகள் கப்பலின் வழியே பயணிக்கின்றன. ஆசிய நாடுகளில், சுமார் 64% இறக்குமதி சரக்குளும், 42% ஏற்றுமதி சரக்குகளும் கையாளப்படுகின்றன.

பண்டைய காலங்களில், தமிழ்நாடு, கடல்சார் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. சோழர் காலத்தில் கடல்சார் வர்த்தகத்தில் தமிழ்நாடு மையமாக திகழ்ந்துள்ளது. கொற்கை, அழகன்குளம், பூம்புகார், நாகப்பட்டிணம், கடலூர் ஆகிய துறைமுகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள துறைமுகங்களுடன் வர்த்தகத் தொடர்பை கொண்டிருந்தன. நம் முன்னோர்கள் கடல்சார் வணிகத்தின் முக்கியத்துவத்தை அறிந்து வைத்து செயல்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாடு, 1,076 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையை கொண்டுள்ளது. இந்தியாவின் கடல்சார் செயல்பாடுகளில், தமிழ்நாடு மிக முக்கிய பங்காற்றி வருகின்றது. சர்வதேச கடல் வணிக பாதையின் அருகில், தமிழ்நாடு கடற்கரை அமைந்துள்ளது. இந்தியாவின் சிறப்புமிக்க சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய மூன்று பெரும் துறைமுகங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.

இந்த பெரும் துறைமுகங்களுடன், அறிவிக்கப்பட்டுள்ள 17 சிறு துறைமுகங்களும் உள்ளன. குறிப்பாக, காட்டுப்பள்ளி துறைமுகம், பெரும் துறைமுகங்களுக்கு இணையாக செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகங்களுடன் சிறு துறைமுகங்கள் முக்கிய பங்காற்றி, வளர்ந்துவர மிக சாதகமாக சூழ்நிலை தமிழ்நாட்டில் உள்ளது.

இந்திய கடல்சார் வளர்ச்சியில், தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. கடல்சார் வணிகம் என்பது வெறும் சரக்கு போக்குவரத்து மட்டுமல்ல, நிலையான வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்குதல், தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவைகளையும் உள்ளடக்கியது.

இந்தியாவை உலக அளவில் கடல்சார் வர்த்தகத்தின் முதன்மையிடத்தில் கொண்டு செல்ல, நம் முன்னெடுப்புகள் பேருதவியாக உள்ளன. மேலும், உலக முதலீட்டாளர்கள் அனைவரும் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் திட்டங்களில், முதலீடு செய்ய வேண்டும் . இந்த அரங்கில் உள்ள அனைத்து முதலீட்டாளர்களிடம், தமிழ்நாட்டில் கடல்சார் கட்டமைப்பில் பல்வேறு வளர்ச்சி மற்றும் இணைந்து செல்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதியை கொண்ட கடல் பகுதியில் ஒரு நுழைவு வாயிலாக உள்ளது.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, தமிழ்நாடு கடல்சார் வாரியம் முக்கிய பங்காற்றுகிறது. முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் அதிகமாக முதலீடு செய்வதை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெரிதும் விரும்புகிறார். எங்கள் முதலமைச்சர் அவர்கள் முதலீட்டுக்கு நல்ல சிறப்பான சாதகமான சூழ்நிலையை உருவாக்கி தருவதில் முனைப்பாக இருக்கிறார் என்பதால், உலக முதலீட்டாளர்கள், தமிழ்நாட்டில் அதிகமாக முதலீடு செய்யும்படி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பாக, கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஔவையார் பாடிய கொன்றைவேந்தனில் “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு“ என்ற முதுமொழிக்கேற்ப, தமிழ்நாட்டில் முதலீடு செய்து திரவியம் தேட நல்ல காலசூழ்நிலை உள்ளது. இதனைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும்.

எங்கள் முதலமைச்சர் அவர்கள், வரும் 2024 ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில், சென்னையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்த திட்டமிட்டுள்ளார். இங்கு வந்துள்ள அனைத்து முதலீட்டாளர்களையும், இம்மாநாட்டில் கலந்து கொள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக அன்புடன் அழைப்பதாக தெரிவித்து, முதலீட்டாளர்களின் முக்கிய இடமாக தொன்றுத்தொட்டு தமிழ்நாடு இருந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: "போதைப் பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்" : காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!