Tamilnadu

ரூ.100 கோடி மோசடி கும்பலிடம் மிரட்டி பணம் பறித்த பாஜக நிர்வாகி : 5 பேரை கொத்தாக தூக்கிய போலிஸ் !

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ளது பழவாத்தான்கட்டளை என்ற பகுதி. இங்கு அர்ஜூன் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த பகுதியில் 'ஶ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி' என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் கிரிப்டோ கரன்சியில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம்தோறும் ரூ.15,000 வீதம் 18 மாதங்களுக்குக் கிடைக்கும் என்று விளம்பரமும் செய்துள்ளார்.

இதனால் அந்த பகுதியிலுள்ள மக்கள், இவரை நம்பி பணத்தை செலுத்தியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களையும் இதில் முதலீடு செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இப்படையாக நாத் பகுதியில் இருந்து மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். தொடக்கத்தில் சொன்னவாறே, பணத்தை கொடுத்து வந்த நிறுவனம், கடந்த சில மாதங்களாக கொடுக்காமல் இருந்துள்ளது.

இதனால் அந்த பகுதி மக்கள் நிறுவனத்தில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்துள்ளனர். அப்போது, இந்த பணம் விரைவில் மொத்தமாக கொடுக்கப்படும் என்று நிறுவனம் விளக்கமளித்தது. இதனை நம்பிய மக்களும் சரி என்று இருந்துள்ளனர். ஆனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர், அர்ஜுன் கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகளும் அலுவலகத்துக்கு வராமல் தலைமறைவாகியுள்ளனர். மேலும் அலுவலகமும் செயல்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள், போலீசில் புகார் அளித்தனர். ஆரம்பத்தில் திருவாரூரில் உள்ள பூதமங்கலத்தை சேர்ந்த நூருல் அமீன் புகார் கொடுத்ததை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் துரிதமாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இந்த மோசடி கும்பல் சுமார் 8 ஆயிரம் பேரிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி அளவில் பணத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அர்ஜுன் கார்த்திக் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், கடந்த 13-ம் தேதி அர்ஜுன் கார்த்தி (45), இவரது நிறுவன கணக்காளராக இருந்த பிரான்சிஸ் மனைவி இவாஞ்சலின் அபிலாதரஸ் (28), நிறுவன பங்குதாரர் கோவிந்தபுரம் ராஜா (65), இவரது மகன் செல்வக்குமார் (25) ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி அர்ஜுன் கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பாஜக நிர்வாகியான சாக்கோட்டை கார்த்திகேயன் என்பவர் தன்னை மிரட்டி பல கோடி ரூபாய் அபகரித்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அதாவது அர்ஜூனுடன் பார்ட்னராக இருந்த விக்னேஷ் என்பவர், அவரை ஏமாற்றி ரூ.1.7 கோடி மோசடி செய்துள்ளதாகவும், இதனால் இவர் போலீசில் புகார் கொடுத்ததாகவும், அப்போது பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருக்கும் சாக்கோட்டை கார்த்திகேயன், இந்த விவகாரத்தில் தலையிட்டு பஞ்சாயத்து பேசி, தன்னை மிரட்டி ரூ.25 லட்சம் மற்றும் கார் கேட்டு பணத்தை அபகரித்து சென்றதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து பாஜக நிர்வாகி சாக்கோட்டை கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்துள்ளனர். சாக்கோட்டை கார்த்திகேயன் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது பெயர் ரெளடி பட்டியலிலும் உள்ளது. இந்த சூழலில் தற்போது மோசடி வழக்கும் இவர் மீது போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி சாக்கோட்டை கார்த்திகேயனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பாக்கப்டுகிறது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: அதானி நிறுவனத்தின் ரூ.12 ஆயிரம் கோடி ஊழலுக்குத் துணைபோகும் மோடி : ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!