Tamilnadu

4 மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி இல்லை - லியோ திரைப்படக்குழு ஐகோர்ட்டில் சொன்ன வாதம் என்ன ?: முழு தகவல்!

லியோ திரைப்படத்தின் 4 மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதிக்க உத்தரவிடமுடியாது என மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அரசிடம் முறையிட வேண்டும், அரசு பரீசிலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற வியாழக்கிழமை வெளியாக உள்ளது. இந்த நிலையில், ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிடலாம், காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிபதி அனிதா சம்பத் முன்பு அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. லியோ படத்தை திரையிட காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான காட்சிக்கு அனுமதிக்க வேண்டும், அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நடைபெற்றது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 19ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம். ஆனால் 5 காட்சிகளுக்கு தான் அனுமதி அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார். காலை 9 மணிமுதல் இரவு 1.30 வரை தொடர்ந்து ஐந்து காட்சிகளை இடைவெளி இல்லாமல் ஒளிபரப்புவது சிரமம் என தெரிவித்தார்.

அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு சென்னைக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டடுள்ளது என குறிப்பிட்டார்.

இதையடுத்து அந்த வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டுவிட்டதா? அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்டு வழக்கை நேற்று ஒத்திவைத்திருந்தனர், மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் பொது நல வழக்கு என்பது ஹீரோ கலாச்சாரம் பற்றியது என தெரிவித்தார்.

விதிவிலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதன்படி எங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்றும் வாதிட்டார், மேலும் காலை நான்கு மணிக்கு ரசிகர் காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மிகப்பெரிய நடிகரின் படம் என்றும் தெரிவித்தார்.

அப்போது குறிப்பிட்ட நீதிபதி அனைத்து காட்சிகளும் ரசிகர்கள் காட்சிதானே என நகைச்சுவையோடு குறிப்பிட்டார். தொடர்ந்து அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஏற்கனவே 5 காட்சிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. சினிமாவின் கால அவகாசம் குறித்து அவர்கள் குறிப்பிடவில்லை, விதிகளை மீற முடியாது என தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஏன் ஏழு மணிக்கு அனுமதிக்க கூடாது ? இன்ட்ர்வல் நேரத்தை 15 நிமிடமாக குறைக்க முடியாதா எனவும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, இன்டர்வேல் நேரம் என்பது தியேட்டர் உரிமையாளர்கள் விளம்பரத்தை முடிவு செய்வது எனவும், ஏற்கனவே ட்ரைலர் வெளியிட்டபோது தியேட்டர்கள் சேதப்படுத்தப்பட்டது.

தியேட்டரில் ரசிகர்கள் காட்சியின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் இறந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை முக்கியம் என தெரிவித்தார். 20 நிமிடங்களுக்கு இடைவெளி விட வேண்டுமென்ற எந்த கட்டாயமும் இல்லை என தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அரசின் முடிவில் தலையிட முடியாது என்றும், விதிவிலக்கு அளிப்பது குறித்து அரசிடம் முறையிடுங்கள் அரசு பரீசிலிக்கட்டும் என்று தெரிவித்தார். நேரத்தை கூட்டவோ குறைக்கவோ உத்தரவிட முடியாது. ஆனால் பரீசிலிக்க உத்தரவிடுகிறேன் என குறிப்பிட்டார். ரசிகர்கள் காட்சிக்கு அனுமதிக்க முடியாது. 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

9 மணிக்கு காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க அனுமதி கோரி மனு அளிக்க பட தயாரிப்பு நிறுவனம் அரசிடம் மனு அளிக்க வேண்டும். அதனை அரசு பரிசீலிக்க வேண்டும். அனுமதி அளித்திருக்க கூடிய நேரத்தில் எப்படி 5 காட்சிகள் திரையிட முடியும் என அரசுடன் ஆலோசனை நடத்துங்கள் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் . இது இடத்தை இன்று மாலை 4 மணிக்கு அரசுடன் லியோ பட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

Also Read: “இனி லியோ தான் வந்து உண்மைய சொல்லணும்..” : 1 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ட்ரைலர்!