Tamilnadu

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி பண மோசடி : பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலிஸ்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள விவேகானந்த நகரைச் சேர்ந்தவர் எஸ்.அர்ஜூன் கார்த்திக். இவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகப் பொது மக்களிடம் கூறியுள்ளார். மேலும் கிரிப்டோ கரன்சி ஆலோசனை நிறுவனத்தையும் நடித்து வந்துள்ளார்.

இதனால் பலர் இவரிடம் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். பின்னர் சில மாதங்கள் மட்டுமே தனது வாடிக்கையாளருக்கு மாதத் தொகையை அர்ஜூன் கார்த்தி வழங்கி வந்துள்ளார். பிறகு தொகை வழங்குவதை நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து பணத்தை இழந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது ரூ.50 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அர்ஜூன் கார்த்தி மற்றும் அவரது அலுவலகத்தில் வேலைபார்த்த அவிலா, ராஜா, செல்வக்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

மேலும் அர்ஜூன் கார்த்தியிடம் நடத்திய விசாணையில், மேலும் சில தகவல்கள் போலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதில் பா.ஜ.க கட்சியின் மாவட்ட ஒ.பி.சி அணி செயலாளர் சாக்கோட்டை கார்த்தி என்பவர் அர்ஜூன் கார்த்தியை மிரட்டிப் பல கோடி பறித்துக் கொண்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த சாக்கோட்டை கார்த்தியை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கிரிப்டோ கரன்சி மோசடியில் இன்னும் பலருக்கும் தொடர்பு இருக்கும் என்பதால் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: ஒருதலை காதலுக்காக நண்பனை கொலை செய்த இளைஞர் : சடலத்துடன் காவல்நிலையம் வந்ததால் அதிர்ச்சி !