Tamilnadu
“இதுதான் நான் முதல்வன் திட்டத்தின் நோக்கமும், திராவிட மாடல் அரசின் எண்ணமும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் தற்போதைய இளம் தலைமுறையினர் உலகை வெல்ல வேண்டும் என்னும் நோக்கில் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டமான, நான் முதல்வன் திட்டத்தின் போட்டி தேர்வு பிரிவின் கீழ் இந்திய குடிமைப் பணிகள் முதல் நிலை தேர்வுகளுக்கு தயாராகும் 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7,500 வழங்கும் திட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு, சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய குடிமை பணிகள் தேர்வுக்கு தயாராகும் ஒவ்வொரு மாணவருக்கும் ஊக்க தொகை வழங்கி, அவர்களின் தேர்வு பயிற்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் நான் முதல்வன் போட்டித் தேர்விற்கு 50,000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், மெரிட் அடிப்படையில் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூபாய் 7500 என 10 மாதம் இந்திய குடிமைப் பணிகள், இரயில்வே பணிகள், வங்கி பணிகள் உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் தரேஷ் அகமது உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய அரசின் தேர்வுகளில் கல்வியாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும் தமிழ்நாட்டு இளைஞர்கள், இளம்பெண்கள் இடம்பெற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம் என்றார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஒன்றிய அரசின் பணிகள் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாதம் ரூ.7,500 வழங்கப்படுகிறது. இந்திய அரசின் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள், இளம்பெண்கள் இடம்பெற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். கல்வியாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும், வெல்ல வேண்டும் என்பது தான் திமுக அரசின் எண்ணம்.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி, உயர்கல்வியில் சிறந்த ஆசிரியர்களும் உட்கட்டமைப்பும் உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டு மாணவர்கள் குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்வாவது குறைந்துள்ளது. குடிமைப் பணித் தேர்வுகளில் முன்னதாக 10% ஆக இருந்த தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம், 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 5% ஆக குறைந்துள்ளது. இது தொடர்ந்தால் ஒன்றியத்திலும், மாநில அரசு வேலைகளிலும் தமிழர்களே இல்லாத சூழல் உருவாகிவிடும். இதனைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் முதல்வன் திட்டத்தில் போட்டித் தேர்வுப் பிரிவு தொடங்கப்பட்டது.
ஓர் அரசு இயந்திரமாக செயல்படுவதை விட, தர்க்க ரீதியாக செயல்பட வேண்டும், அப்பொழுது தான் அந்நாட்டிற்கும் மாநிலத்திற்கும் வளர்ச்சி கிடைக்கும். ஓர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மாநிலத்திலேயே அரசின் உயர் பொறுப்புகளில் இருந்தால்தான் அம்மாநிலம் வளர்ச்சி பெறும். ஊக்கத் தொகையானது மாணவர்களின் பொருளாதார சுமையை குறைக்கும். எது குறித்தும் கவலையில்லாமல் மாணவர்கள் படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!