Tamilnadu

”விளையாட்டுத்துறையிலும் தலைசிறந்து விளங்கும் தமிழ்நாடு” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு வீரர் - வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி ,வெண்கலம் பதக்கம் வென்ற வீரர்கள் அனைவருக்கும் ரூ.9 கோடியே 40 லட்சம் மதிப்பில் ஊக்கத் தொகையை வழங்கினார்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,"2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் தமிழ்நாட்டு வீரர்கள் 22 பதக்கங்களை வென்றனர். ஆனால் இந்த முறை 28 பதக்கங்களை வென்று இருக்கிறார்கள். இதில் 9 தங்கப்பதக்கம். இந்தியா வென்ற பதக்கத்தில் 28% தமிழ்நாட்டு வீரர்கள் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசுக் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. அதேபோல் விளையாட்டுத் துறைக்கும் முதலமைச்சர் கூடுதல் கவனம் அளித்து வருகிறார்.

மாதம் ஒருமுறை தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளைத் தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. வரும் ஜனவரியில் கேலோ இந்தியா போட்டி நடைபெறுகிறது. விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு தனது அடையாளங்களைப் பதித்து வருகிறது.

தமிழ்நாடு என்றால் சமூகநீதி, தமிழ்நாடு என்றால் கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி என்று சொல்வார்கள். இந்த வரிசையில் இனி தமிழ்நாடு என்றால் விளையாட்டுத்துறையின் தலைநகரம் என்று சொல்லும் அளவிற்குத் தலை சிறந்து விளங்கும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”மாநிலக் கல்விக் கொள்கை விரைவில் முதலமைச்சரிடம் வழங்கப்படும்” : அமைச்சர் பொன்முடி தகவல்!