Tamilnadu
”சாம்பியன்களை உருவாக்கி வரும் விளையாட்டு துறையின் கேப்டன்": உதயநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
சீன நாட்டின் ஹாங்சூவில் நடைபெற்ற 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 20 வீரர், வீராங்கனைகள் 9 தங்கம், 11 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றனர்.
உயரிய ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 வீரர் - வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 9 கோடியே 40 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார்.
முன்னதாக இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீன நாட்டின் ஹாங்சூவில் நடைபெற்ற 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து பதக்கங்களைப் பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதற்காக நாம் இங்கே கூடி இருக்கிறோம்.
இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு இந்திய விளையாட்டு வீரர்கள் பல்வேறு பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளார்கள் என்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியா மொத்தமாக வென்ற 107 பதக்கங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் 28 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இந்திய அளவில் பார்த்தால் நமது மாநிலம் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு பதக்கங்களை வென்ற 20 விளையாட்டு வீரர்களுக்கு இன்று 9 கோடியே 40 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை பரிசுகள் வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
அகில இந்திய அளவிலே, உலகளாவிலான போட்டிகளில் தொடர்ந்து உங்களது பங்களிப்பை செலுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ச்சியான பதக்கங்கள் பெறுவதும், தொடர் வெற்றிகளைப் பெறுவதும்தான் உங்களுக்கும் பெருமை; நமது தமிழ்நாட்டுக்கும் பெருமை; ஏன் இந்தியாவிற்கே பெருமை!
இந்தப் பாராட்டு உங்களுக்கும் உங்களது வெற்றிக்கும் மட்டுமல்ல; நீங்கள் இன்னும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்று ஊக்கமளிக்கவும் - உங்களைப் போல இன்னும் பல வீர்கள் உருவாக அடித்தளமாக அமைய வேண்டும் என்பதற்காகவும்தான். உங்களைப் பார்த்து இன்னும் ஏராளமான வீரர்களும் வீராங்கனைகளும் உருவாவார்கள் என நம்புகிறேன்.
எந்தவொரு அரசாக இருந்தாலும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஒரு சில துறைகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தும். ஆனால் நம்முடைய திராவிட மாடல் அரசானது, அனைத்துத் துறைகளிலும் அதிகக் கவனம் செலுத்துவதன் மூலமாக, அனைத்துத் துறைகளையும் ஒருசேர வளர்த்து வந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சில துறைகள் ஸ்டார் துறைகளாக வளர்ந்து வருகின்றன. அதில் விளையாட்டுத் துறையும் ஒன்று!
இந்தத் துறையின் அமைச்சர் ஒரு ஸ்டாராக இருப்பதால், இந்த துறையும் ஸ்டார் துறையாக வளர்ந்துவிட்டது. விளையாட்டுத் துறையின் மூலமாக, விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இளைய சமுதாயமும் எழுச்சி பெற்று வருகிறது. நாள்தோறும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான விளையாட்டுத் துறை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும், அமைச்சர் உதயநிதி அவர்கள் நடந்து அல்ல, ஓடிக் கொண்டே இருக்கிறார்.
அந்தத் துறையின் கேப்டனாக இருந்து, அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். அவருக்கும் அவரது துறையைச் சார்ந்த உயரதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!