Tamilnadu

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி.. வீடு கேட்டு கோரிக்கை.. அதிரடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் உதயநிதி !

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் அன்று சென்னை தியாகராயநகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக முதல்வர் சென்ற பொழுது அங்கே முதல்வரை ஹர்ஷினி என்னும் 3ஆம் வகுப்பு பயிலும் ஒன்பது வயது சிறுமி மழலை குரலில் "தாத்தா பாய்" என்று வழியனுப்பி வைத்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

அச்சிறுமி மழலை குரலில் முதல்வரை வழியனுப்பி வைத்த வீடியோ வைரலாகி சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மழலை குரலில் வழியனுப்பி வைத்த 9 வயது சிறுமிக்கு ஹீமோபிலியா என்னும் இரத்தம் உறையா நோய் இருப்பது சுகாதாரத்துறை சார்பில் கண்டறியப்பட்டு அச்சிருமிக்கு அரசு தரப்பில் சிகிச்சை அளிக்கபபட்டு வருகிறது. சிறுமியின் தந்தை ராஜீவ் சென்னை வேப்பேரியை சேர்ந்தவர்.

அவர் சென்னையில் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். சிறுமியின் தாய் கோகிலா சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். சிறுமியின் நோயை குணப்படுத்த சிறுமியின் பெற்றோர் நாள்தோறும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இது குறித்த செய்தி அறிந்ததும், ஹீமோபிலியா என்னும் இரத்தம் உறையா நோயால் பாதிப்புக்குள்ளான சிறுமியை க்டந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறுமியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து சிறுமிக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்ஹை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வாக்குறுதியும் அளித்தனர். அதன்படி தற்போது சிறுமிக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அன்று சிறுமி தாங்கள் நிம்மதியாக வாழ அரசு சார்பில் வீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பில் வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சத்தியமூர்த்தி நகர் திட்டப்பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையை ஹர்சினியின் குடும்பத்தினரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி, “சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சகோதரர் ராஜீவ். அவருடைய மகள் ஹர்சினிக்கு ஹீமோபிலியா எனும் நோய் பாதிப்பு இருந்த நிலையில், அவருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில், சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது நம்முடைய கவனத்திற்கு வந்தபோது, சிறுமி ஹர்சினியை சமீபத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம். அப்போது, ஹர்சினியின் குடும்பத்தினர், வீடற்ற நிலையில் சாலையோரம் வசிப்பதாகவும், சுகாதாரமான வாழ்வுக்கு அரசு தரப்பில் ஒரு வீடு வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறைக்கு நாம் அனுப்பி வைத்த நிலையில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சத்தியமூர்த்தி நகர் திட்டப்பகுதியில் ஹர்சினிக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை ஹர்சினியின் குடும்பத்தாரிடம் இன்று வழங்கி வாழ்த்தினோம். புதிய இல்லத்தில் தங்கை ஹர்சினியின் கனவுகள் மெய்ப்படட்டும்.” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: "இதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" - இங்கிலாந்து மீதான வன்மத்தை கொட்டிய ஆஸ். முன்னாள் கேப்டன் !