Tamilnadu

”இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம்!

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், பம்மல் தெற்கு பகுதி தி.மு.க சார்பாகத் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நாகல்கேணி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்குத் தாம்பரம் மாநகர ஒன்றாவது மண்டலகுழு தலைவர் வே.கருணாநிதி தலைமை தாங்கினார். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மாநில இலக்கிய அணி இணை செயலாளர் ஈரோடு இறைவன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், "முதன்முதலாக காப்பீடு திட்டத்தைக் கொண்டுவந்து லட்சக்கணக்கான உயிர்களைப் பாதுகாத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான். ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தவரும் அவர்தான். இப்படி அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை வளப்படுத்திடவேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

தற்போது கலைஞர் அவர்களின் மருவுருவாக நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்துவருகிறார். இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து அதை செயல்படுத்தி வருகிறார். நாம் கொண்டு வந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தற்போது கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களிலும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. அதேபோல் காலை உணவுத் திட்டம் தெலங்கானாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்படி இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்குதான் வெற்றி..” : கருத்துக்கணிப்பை வெளியிட்ட TIMES NOW !