Tamilnadu

“பத்திரிகையாளர்களை தீவிரவாதிகள் போல பாஜக நடத்தி வருகிறது..” - ஜோதிமணி எம்.பி கண்டனம் !

டெல்லியில் தலைமை இடமாகக் கொண்டு NewsClick என்ற இணைய தளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணைய தளத்தில் பா.ஜ.க அரசின் மக்கள் விரோத திட்டங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி வருகிறது. அதேபோல் தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ஆட்சியை பிடிக்கும் பா.ஜ.கவின் தந்திர வேலைகளும் இந்த இணையதளத்தில் செய்தியாகவும், கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளது.

இப்படி தொடர்ந்து பா.ஜ.க அரசின் முகத்தை கிழித்தெறிந்து வந்ததால் கடுப்பான ஒன்றிய பா.ஜ.க அரசு அமலாக்கத்துறையை ஏவியது. 2021ம் ஆண்டு NewsClick அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கி முறைகேடு செய்ததாகவும் குற்றம்சாட்டினர். பின்னர் இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், NewsClick மற்றும் அதன் உரிமையாளர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது.

இதையடுத்து அண்மையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர், சீனாவிலிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு NewsClick பா.ஜ.க அரசுக்கு எதிராகச் செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து தொடர்ச்சியாக பா.ஜ.கவினர் NewsClick இணையதளத்திற்கு எதிராகவே கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் NewsClick இணைய தளத்திற்குத் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வீடுகளில் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு திடீரென ஆய்வு செய்துள்ளது. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு பத்திரிகையாளர்களின் மடிக்கணினி, செல்போன்கள் ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி போலிஸாரின் இந்த ரெய்டுக்கு சக பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் பத்திரிகை சுதந்திரம் பறிபோவதாகவும் கருத்து தெரிவித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, "டெல்லி காவல் துறை News Click ஊடகவியலாளர்கள் வீடுகளுக்கு இன்று அதிகாலை சென்று அவர்களின் லேப்டாப், செல்போன் பறிமுதல் செய்துள்ளது கண்டனத்துக்குரியது. இந்தியாவில் ஊடகவியலாளர்களை தீவிரவாதிகள் போல ஒன்றிய அரசு நடத்துகிறது. இதே போலத்தான் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பெண் ஊடகவியலாளரை மிரட்டு்வகையில் பேசுகிறார்.

ஜி 20 மாநாட்டுக்கு வந்த அமெரிக்க அதிபர் பைடன், இந்தியாவில் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியாமல், வெளிநாட்டில் சென்று பத்திரிகையாளர்ளை சந்திக்கிறார். சர்வதேச அளவில், இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறித்த குறியீடு மிகவும் சரிந்து வருவது வேதனைக்குரியது." என்றார்.

Also Read: ம.பி-யில் ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்.. ஆருடம் கூறும் கருத்துக் கணிப்புகள்.. அதிர்ச்சியில் பாஜக !