Tamilnadu

வயிறு வலியால் துடித்த மாற்றுத்திறனாளி.. பரிசோதனையில் சிக்கிய 7UP பாட்டில்.. அதிர்ச்சியின் பின்னணி ?

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு அதிகாலை 3 மணிக்கு, 45 வயதுடைய வாய் பேச முடியாத காது கேட்காத திருமணமாகாத மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் உறவினர் ஒருவர் துணையுடன் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற வந்துள்ளார். அப்போது அந்த மாற்றத்திறனாளி நபருக்கு ஆசனவாயில் ரத்தக் கசிவும் இருந்துள்ளது.

இந்த சூழலில் அந்த மாற்றுத்திறனாளி நபர் வயிறு வலி என்று வந்ததால் உடனடியாக அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்தனர். அப்போது அவரது வயிற்றில் முழு பாட்டில் ஒன்று இருந்துள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாக பொது அறுவை சிகிச்சை மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் உடனடியாக வந்த அரசு மருத்துவக் கல்லூரி பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் நிர்மலா தேவி தலைமையிலான மருத்துவக் குழுவினர் உடனடியாக வயிற்றுக்குள் பாட்டிலிருந்த மாற்றுத்திறனாளி நபருக்கு சிடி ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது அந்த ஸ்கேனில் ஆசனவாய் வழியாக (மலக்குடல்) முழு 7up பாட்டில் ஒன்று திணிக்கப்பட்டு குடலை பெரிய துளையிட்டு வயிற்றுக்குள் சென்றது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்தால் தான் அவர் உயிரை காப்பாற்ற முடியும் என்று எண்ணிய மருத்துவர்கள் இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்ய ஏற்பாடு செய்யப்படடது. தொடர்ந்து பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் நிர்மலாதேவி, அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நீலகண்டன் சிவக்குமார் மயக்கவியல் மருத்துவர் கார்த்திக் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளி நபருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

அப்போது அவரது வயிற்றுக்குள் இருந்த முழு 7up பாட்டிலையும் உடையாமல் சேதமின்றி வெளியே எடுத்தனர். மேலும் 7up பாட்டில் திணிக்கப்பட்டதால் மாற்றுத்திறனாளி நபரின் மலக்குடல் காயமடைந்ததை தொடர்ந்து தற்போது மலக்குடலை காயம் ஆறுவதற்காக வெளியே வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அந்த நபர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார்.

மேலும் இதுகுறித்து பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் நிர்மலாதேவி கூறுகையில்: “வயிற்று வலி என்று வந்த மாற்றுத்திறனாளி நபரின் வயிற்றில் 7up பாட்டில் இருந்தது முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது பின்னர் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு முழு 7up பாட்டிலையும் வயிற்றுக்குள் இருந்து அகற்றப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டுள்ளது. மலக்குடல் வழியாக குடலை பெரிய துளையிட்டு வயிற்றுக்குள் சென்ற முழு 7up பாட்டில் உடையாமல் மருத்துவ குழுவினர் அகற்றி உள்ளோம்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று சம்பவம் படிக்கும் பொழுது புத்தகத்தில் இருந்தது. ஆனால் தற்போது தான் இது போன்று பாதிக்கப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சை செய்து முழு பாட்டிலும் அகற்றப்பட்டுள்ளது. மேலும் வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளியாக இருக்கக்கூடிய நபர், அவரே அவரது ஆசனவாய் வழியாக முழு 7up பாட்டிலையும் திணித்திருக்க வேண்டும் அல்லது யாரேனும் அவரை துன்புறுத்த இதுபோன்று செய்திருக்க வேண்டும்.” என்றார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளி நபரின் ஆசனவாய் வழியாக வயிற்றுக்குள் 7up நுழைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: குணமடையாத அக்சர் படேல்.. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்ப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம் !