Tamilnadu
”இரக்கமற்ற அரசாக நடந்து கொண்டிருக்கும் நரேந்திர மோடி ஆட்சி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க. பவள விழா கழகப்பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவில் நடைபெற்றது.
இந்த முப்பெரும் விழாவில், மயிலாடுதுறை கி.சத்தியசீலன் அவர்களுக்குப் பெரியார் விருது, மீஞ்சூர் க. சுந்தரம் அவர்களுக்கு அண்ணா விருது,அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களுக்குக் கலைஞர் விருது, தென்காசி மலிகா கதிரவன் அவர்களுக்குப் பாவேந்தர் விருது, பெங்களூர் ந.இராமசாமி அவர்களுக்குப் பேராசிரியர் விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.
பின்னர் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் உதயம் ஆனது.75 ஆண்டுகளாக தமிழ்ச் சமுதாயத்தின் காவல் அரணாக கழகம் செயல்பட்டு வருகிறது. 1967 ஆம் ஆண்டு முதன் முதலாக நாம் ஆட்சிக்கு வந்தோம்.1971, 1989, 1996, 2006, 2021 என ஆறு தேர்தலாக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வருகிறோம். ஒரு பக்கம் ஆட்சி - இன்னொரு பக்கம் கட்சி இரண்டின் மூலமாக தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களை விட தலைசிறந்த மாநிலமாக மாற்றி வருகிறோம். அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம். இடையிடையே கொள்கையற்ற அதிமுக கூட்டத்தின் ஆட்சி வந்து தமிழ்நாட்டைச் சீரழித்தாலும் - அதனையும் திருத்திக் கொண்டு - தமிழ்நாட்டை வளர்த்தெடுத்து வருகிறோம்.
இன்றைக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி - தமிழ் நாட்டு மக்களின் வளர்ச்சி - தமிழினத்தின் வளர்ச்சி - பலருக்கும் பொறாமை ஏற்படுத்தும் வளர்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாடு என்ற மாநிலத்தை - அதற்கான உரிமைகளை சிதைப்பதன் மூலமாக நம் மாநில மக்களின் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார்கள். அதனைத் தான் பட்டவர்த்தனமாக பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது.
ஜி.எஸ்.டி மூலமாக மாநில உரிமையைப் பறித்து விட்டார்கள். ஒரு மாநில அரசை நடத்துவதற்கு மிக முக்கியமான நிதி ஆதாரம் என்பது வரி வருவாய் தான். அந்த வரி வருவாயை கபளீகரம் செய்வதன் மூலமாக மாநில அரசைச் செயல்பட விடாமல் முடக்குகிறார்கள்.
மக்களுக்கு நேரடியாக தொடர்பு கொண்டது மாநில அரசுகள் தான். மக்களுக்கு தேவையான கல்வி - சுகாதாரம் - குடிநீர் - சாலை வசதிகள் - கடன்கள் - மானியங்கள் - பெண்கள் முன்னேற்றம் - விளிம்பு நிலை மக்களுக்கான உதவிகள் - இவை அனைத்தையும் வழங்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்குத் தான் இருக்கிறது.
இதனைச் செய்து தருவதற்கு நிதி வேண்டாமா? அப்படிப்பட்ட நிதிகளை கிடைக்கவிடாமல் செய்யவே ஜிஎஸ்டியை கொண்டு வந்து நிதி வருவாய் வாசல்களை அடைத்தார்கள். நிதியை வசூல் செய்கிறீர்களே.. முறையாக பிரித்துக் கொடுக்கிறீர்களா என்றால் அதுவும் இல்லை.
அதேபோல் கல்வி மிக முக்கியமான ஒரு துறை. ஒவ்வொரு மாநில அரசும் - அங்கு வாழும் பெரும்பான்மை மக்களின் பண்பாட்டு - கலாச்சாரம்- அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியை வழங்கும். புதிய கல்விக் கொள்கை - பொதுவான கல்வி முறை என்ற பெயரால் சமப்படுத்துகிறோம் என்ற போக்கில் நமது மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள்.
ஒன்றிய அரசாங்கம் சொல்லும் கல்வி வளர்ச்சியை - தமிழ்நாடு மாநிலம் எப்போதோ எட்டி விட்டது. கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்குவதற்கான முயற்சிதான் அவர்கள் கொண்டு வரும் கல்விக் கொள்கை.
நீட் தேர்வைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவைச் சிதைப்பதற்காக கொண்டுவரப்பட்டதே நீட் தேர்வு. லட்சங்களைச் செலவு செய்து படிக்க முடிந்தவர்களால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள். சில தனியார் கோச்சிங் செண்டர்கள் லாபத்துக்காகவே இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
அனிதா முதல் யோகேஸ்வரன் வரை இது வரை 23 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துள்ளார்கள். இத்தகைய தற்கொலைகள் இப்போது வட மாநிலங்களிலும் நடக்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த 14 ஆம் தேதி ஜார்கண்டைச் சேர்ந்த மாணவி, ராஜஸ்தானில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வுக்கு படிப்பதற்காக வந்தவர் அவர்.
கடந்த மாதம் ராஜஸ்தானில் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் கடந்த ஆண்டில் 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இப்படி உயிரைப் பறிக்கும் தேர்வாக நீட் இருக்கிறது. இத்தனை தற்கொலைகள் நடந்து வருகிறதே இதற்கான காரணத்தை ஆராய்ந்ததா ஒன்றிய பாஜக அரசு?இரக்கமற்ற அரசாக நரேந்திரமோடியின் அரசு இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!