Tamilnadu

பிறரை மட்டும் குலத் தொழிலைச் செய்ய சொல்வது ஏன்?.. அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேள்வி!

ஒன்றிய பா.ஜ.க அரசு குலக்கல்வியை செயல்படுத்தும் வகையில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இதற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், குல தொழிலைச் செய்யச் சொல்வது ஏன்? என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை உலக தமிழ்ச்சங்க அரங்கில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்த "இந்தியாவின் சமூகநீதி பெருவிழா" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,"சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படாமல் உள்ளது. சமுதாயத்தை மாற்றுவதற்கு அரசு ரீதியாக சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தப்பட வேண்டும்.

ஒரு காலத்தில் பிராமணர்கள் மட்டும் படித்திருந்தனர். அதனால் அவர்களே அர்ச்சகர்களாகக் கருவறைக்குள் இருந்தார்கள். தி.மு.க கொண்டுவந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தால் தற்போது பெண்கள் முதற்கொண்டு கருவறைக்குள் இருக்கிறார்கள்.

மேலும் பிராமணர்களே தற்போது அர்ச்சகர் தொழிலை விட்டுவிட்டு மருத்துவம், அரசுப்பணிகள் உள்ளிட்ட பிற உயரிய பணிகளுக்குச் சென்றுவிட்டனர். ஆனால் பிற சமூகத்தினர் மட்டும் எப்படி குலத் தொழிலைத் தொடர்ந்து பின்பற்ற முடியும்?. அதேபோல் எண்ணிக்கையில் வெறும் 3% உள்ள உயர்சாதியினர் எப்படி அனைத்து அரசுப் பணிகளிலும் பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ளார்கள்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: அமித்ஷாவுக்கு இந்தி மட்டுமே தெரியும் என்பதால்தானே இந்தியை திணிக்கிறார் - நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் !